பாபிசிம்ஹாவின் அராஜகம்… இதற்காகதான் ஆசைப்பட்டீர்களா டைரக்டர்?

‘நன்றி’ என்ற வார்த்தைக்கு சினிமா வைத்திருக்கும் அர்த்தமே வேறு. என் வளர்ச்சிக்கு அவர்தான் காரணம் என்று பொதுமேடைகளில் புகழ்ந்தாலும், நிஜத்தில் நகத்தை கிள்ளிக் கொடுக்கக் கூட தயங்குவார்கள் சிலர். அப்படியொருவராகியிருக்கிறார் பாபிசிம்ஹா. ‘ஜிகிர்தண்டா’ படத்திற்காக தேசிய விருதே வாங்கப் போகும் சிம்ஹாவுக்கு ‘நன்றி மறந்த நல்லண்ணன்’ விருதும் சேர்த்துக் கொடுக்கலாம். ஏன்?

ஒரு சின்ன பிளாஷ்பேக். எம்.மருதுபாண்டியன் என்ற இயக்குனர்தான் முதன் முறையாக பாபிசிம்ஹாவுக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்தவர். ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை இவர் எடுக்க முன் வந்தபோது பாபிசிம்ஹாவை பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட தெரியாது. அந்த படத்தின் இயக்குனர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் மருதுபாண்டியன்தான். படம் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கும் போதே தனது அறைத்தோழரான ‘நேரம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம், ‘என் படத்துல பாபின்னு ஒரு பையன் நடிக்கிறான். அற்புதமான நடிகன். உங்க படத்துல அவனுக்கு வாய்ப்பு கொடுங்க’ என்கிறார். மருதுபாண்டியன் சொன்னார் என்பதற்காக பாபியை ‘நேரம்’ படத்தில் நடிக்க வைக்கிறார் அவர். இப்படிதான் ஆரம்பித்தது பாபி சிம்ஹாவின் கேரியர்.

நடுநடுவே போராடி ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை முடித்தார் மருதுபாண்டியன். அதற்குள் உயரத்திற்கு போய்விட்டார் பாபி. இந்த படத்தில் டப்பிங் பேச வேண்டும் என்று அவரை அழைத்தபோது ‘இருபத்தைந்து லட்ச ரூபாய் கொடுத்தா பேசுறேன். இல்லேன்னா ஸாரி’ என்று பாபி கூற, அப்போதுதான் பாபி எவ்வளவு பெரிய நடிகர் என்பதையே உணர்ந்தார் மருதுபாண்டியன். ‘இந்த படம் ரிலீஸ் ஆகி லாபம் வரட்டும். கண்டிப்பா நீங்க கேட்கிற பணத்தை நான் கொடுக்கிறேன். இப்போதைக்கு படத்தை ஏடிஎம் என்ற நிறுவனம்தான் வெளியிடுகிறது. அதனால் படம் வெளியாவதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்றாராம் மருதுபாண்டியன்.

‘அப்படின்னா இந்த படத்தின் லாபத்தில் எனக்கு பாதி பங்கு கொடுப்பேன்னு அக்ரிமென்ட்ல சைன் பண்ணி கொடுங்க. அதே மாதிரி படம் வெளிவந்ததும் கணக்கு வழக்குகளை எங்கிட்ட முறையா ஒப்படைக்கணும். அதுக்கெல்லாம் சம்மதிச்சா நான் டப்பிங் பேசுறேன்’ என்று பாபி சிம்ஹா சொன்னதை அவருக்கு முதல் வாய்ப்பு கொடுத்த மருதுபாண்டியன் கூட ஏற்றுக் கொள்வார். ஆனால் படம் தரமாக வந்திருக்கிறது என்பதற்காகவும். அதுவும் உதவி இயக்குனர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சொன்ன படம் என்பதற்காகவும் ரசனை உள்ளத்தோடு படத்தை வெளியிடும் ஏ.டி.எம் நிறுவனம் அதற்கு எப்படி ஒப்புக் கொள்ளும்? சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் இந்த விஷயத்தில் பாபியை சமாதானப்படுத்த முன் வந்தும், ‘லாபத்தில் ஐம்பது சதவீதம் கொடுங்க. இல்லேன்னா இருபத்தைந்து லட்சம் பணம் கொடுங்க. இரண்டும் இல்லேன்னா முடியாது’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம் பாபிசிம்ஹா.

இந்த பிரச்சனையின் உச்சக்கட்டமாக ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கும் அவர் வரவில்லை. இது குறித்து பாபியை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பிய நிருபர்களிடம், ‘அந்த படத்தை பற்றி பேசாதீங்க’ என்று கூறி எஸ்கேப் ஆகி வருகிறார் அவர்.

அதிருக்கட்டும்… இந்த படத்தில் நெகிழ்வான இன்னொரு விஷயம் பதிவாகியிருக்கிறது. பாபி சிம்ஹா ஒரு சின்ன அறையில் தங்கியிருப்பதாக கதை நகர்கிறது. படப்பிடிப்புக்கு பயன்பட்டிருக்கும் அந்த அறை ஒருகாலத்தில் விஜய் சேதுபதியும், அட்டக்கத்தி தினேஷும் குடியிருந்த சின்ன அறை. இது சென்னை நெசப்பாக்கத்தில் இருக்கிறது. இந்த அறைதான் வேண்டும் என்று தேடிப்பிடித்து அதில் படமாக்கினாராம் மருதுபாண்டியன்.

அந்த அறையில் தங்கியிருந்த விஜய் சேதுபதியும், அட்டக்கத்தி தினேஷும் இன்று சினிமாவில் பெரிய இடத்திலிருக்கிறார்கள். அந்த அறையில் தங்கியதை போல நடித்த பாபி சிம்ஹாவும் இன்று பெரிய நட்சத்திரம். எல்லாவற்றையும் தாண்டி அந்த அறையே இந்த படத்தில் நடித்திருக்கிறது. ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்திற்கு மக்கள் தரப்போகும் வெற்றி என்ன?

நமது முந்தைய வரிகளிலேயே பதிலும் இருக்கிறது. ஆல் த பெஸ்ட் மருதுபாண்டியன்!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
simran
சிம்ரன் வீட்டுக்கு படையெடுக்கும் இயக்குனர்கள்

கோடம்பாக்கத்தில் தெருவுக்கு நாலு டைரக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள்தான் மாவட்டத்திற்கு ஒருவர் கூட இல்லை. இதனால் தெருவெங்கும் கனவுகளோடு திரியும் இயக்குனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்...

Close