திருட்டுக் கதைக்கு விருதா? பட்டுக்கோட்டை பிரபாகர் கொதிப்பு!

தோலிருக்க ‘சுளை’ முழுங்கும் ஆசாமிகளின் கூடாராமாகிவிட்டது கோடம்பாக்கம். வருஷத்துக்கு 100 படங்கள் வெளியாகிறதென்றால் அதில், ‘என் கதையை சுட்டுட்டாங்க’ என்று சுட்டிக்காட்டப்படும் படங்கள் பாதியாவது இருக்கிறது. ஏழை சொல் அம்பலம் ஏறாது. எதுக்கு வெட்டியா கத்துவானேன் என்று ஐயனார் கோவிலில் சூடத்தை ஏற்றி வைத்து ‘அம்போன்னு போவட்டும்’ என்று வயிறெரிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிற ஆபத்தான போக்கு எப்போது மாறுமோ?

இந்த திருட்டுக் கூட்டத்தில் நாம் மதிக்கக்கூடிய இயக்குனர்களும் அடக்கம் என்றால் என்னாகும் மனசு? படுபயங்கர அதிர்ச்சி. யெஸ்… தமிழக அரசின் சிறந்த கதைக்கான விருது லிஸ்ட்டில் ராதாமோகன் இயக்கிய ‘பயணம்’ படமும் இருக்கிறது. வாழ்க கோஷத்தை எழுப்பும் முன்பே, வாயை அடைத்து ஒழிக கோஷம் போட்டுவிட்டார் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

அவர் தனது முகநூலில் இது குறித்து எழுதியிருப்பதாவது-

தமிழக அரசின் திரைப்பட விருதுகளில் 2011ம் வருடத்தில் சிறந்த கதைக்கான விருது பயணம் திரைப்படத்திற்காக திரு.ராதாமோகனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் சிறந்த கதாசிரியர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இந்தக் கதைக்காக வழங்கப்படுவதில் எனக்கு மறுப்பிருக்கிறது. படம் வந்ததுமே என்னுடைய பல ரசிகர்கள் போன் செய்து அது என் கதை என்று பேசினார்கள். இது நான் எழுதிய “இது இந்தியப் படை” நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது என்கிற என் சந்தேகத்தை விரிவாக ராதா மோகனுக்கு கடிதம் எழுதினேன். உடன் என் கதையையும் இணைத்து அனுப்பி போனிலும் பேசினேன். கதையைப் படித்துவிட்டு ராதாமோகனும் என்னிடம் இரண்டு கதைகளிலும் உள்ள ஒற்றுமையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.. அது குறித்து மீடியாவுக்கு ஒரு அறிக்கை வெளியிடுவதாகவும் சொன்னார். ஆனால் செய்யவில்லை. ஆகவே நான் குமுதம் இதழில் என் மனநிலையையும் இரண்டு கதைகளிலும் உள்ள ஒற்றுமை குறித்தும் விரிவாக ஒரு கட்டுரை எழுதினேன். அப்படியிருக்க.. இந்த அறிவிப்பு என்னை ஆச்சரியப்படுத்துகிறது. வேதனைப்படுத்துகிறது. அரசு இந்த விருது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கை.

இவ்வாறு கூறியிருக்கிறார் பட்டுக்கோட்டை.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Vijay Sethupathi Karupan
விஜய் சேதுபதி மீது போலீசில் புகார்! அட இந்த நியாயத்தை எங்க போய் சொல்ல?

Close