ஒரு ஊரையே அழவிட்ட விஷாலின் அண்ணி!

ஒருகாலத்தில் எஸ்.எஸ்.மியூசிக் சேனலில் ஏராளமான இளைஞர்களை கவர்ந்திழுக்கிற அளவுக்கு பேசி வந்த ஸ்ரேயாரெட்டி, பிற்காலத்தில் ஜி.கே ரெட்டி குடும்பத்தின் மாட்டுப்பெண் ஆவோம் என்று நினைத்திருக்கவே மாட்டார். ‘திமிரு’ படத்தில் விஷாலுடன் நடித்துக் கொண்டிருந்தபோது அவரது அண்ணன் அஜய்கிருஷ்ணாவுடன் காதல் வயப்பட்டு அவரை கல்யாணமும் செய்து கொண்டார். ஆண்டுகள் உருண்டோடினாலும், அவ்வப்போது ‘காஞ்சிவரம்’ போன்ற நல்ல படங்களில் மட்டுமே நடித்து வந்த ஸ்ரேயாவுக்கு, விரைவில் வெளிவரப்போகும் ‘அண்டாவக் காணோம்’ பெரிய பெயரை பெற்றுத் தரும். ஏன்? படத்தின் கதையும், படமாக்கப்பட்ட விதமும் அப்படி.

வேல்மதி என்பவர் இயக்கியிருக்கிறார். ஆசை ஆசையாக தன் அண்டாவை பாதுகாக்கும் கிராமத்துப் பெண், அந்த அண்டா காணாமல் போனால் எவ்வளவு பதற்றப்படுவாள்? அந்த அண்டா மீண்டும் கிடைத்ததா? இதுதான் கதை. வேல்மதிக்கு இங்கிலீஷ் கஷ்டம். ஸ்ரேயாரெட்டிக்கு தமிழ் தகராறு. ஒரு வழியாக தங்கிலீஷில் கதை சொல்லி அசத்தினாராம். அப்பவே தெளிவாக சொல்லியிருக்கிறார் ஸ்ரேயா.

“எனக்கு தமிழ் சரியா பேச வராது. புரிஞ்சுக்கறதும் கஷ்டம். என்னைப் போய் வில்லேஜ்ல வச்சு… எப்படி ஷுட்டிங் எடுத்து… எப்படிதான் படத்தை முடிக்கப் போறீங்களோ?” என்று. நாம எடுத்த முடிவு மண்டை குடைச்சலில் கொண்டு போய் விட்ருமோ என்று அஞ்சிய வேல்மதிக்கு ஸ்ரேயா ரெட்டி தந்ததுதான் இன்ப அதிர்ச்சி.

சுற்றி நிற்கும் மதுரை ஜனங்களுக்கு நடுவில் சுமார் பத்து நிமிஷம் பேச வேண்டிய டயலாக். கண்ணீரும் கம்பலையுமாக அவர் பேசிமுடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால், அந்த ஊரே சுற்றி நின்று அழுது கொண்டிருந்ததாம்.

வித்தியாசமான கதை களத்துடன் திரைக்கு வரப்போகும் இந்தப்படம், தமிழ்சினிமாவின் பெருமையை உலகத்திற்கே சொல்லும் விதத்தில் நிறைய விருதுகளை குவிக்கும் என்று நம்புகிறது கோடம்பாக்கம்.

அண்டா வழியுற அளவுக்கு விருதுகளை வாங்கிட்டு வாங்க!

முக்கிய குறிப்பு- ஏற்கனவே தங்க மீன்கள், குற்றம் கடிதல் படங்களுக்காக தேசிய விருதை பெற்றிருக்கிறார் ‘அண்டாவக் காணோம்’ படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார். அப்ப கன்பார்ஃம்!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
thottam movie pressmeet056
Thottam Movie Press Meet Photos

Close