அந்த தாடிக்குள் ஓளிந்திருக்கிறது, தமிழ்பாடலின் உயிர் நாடி -ஸ்டான்லி ராஜன்

எவ்வளவோ கவிஞர்கள் முட்டிமோதும் திரையுலகம் அது, ஒரு சிலர் முத்திரை பதித்துகொண்டனர், இன்னும் பலர் காத்திருக்கின்றனர், ஆனால் ஏராளமான பாடல்களை தரும் வல்லமையுள்ள ஒருவன் உறங்கி கொண்டிருக்கின்றான் அல்லது ஒதுங்கி கொண்டிருக்கின்றான்

அது டி.ராஜேந்தர்

தமிழ் இலக்கியத்தை முற்றும் கற்று தேர்ந்தவர் என்பதால் தமிழ் அவருக்கு அழகாக வாய்த்திருக்கின்றது, ஒரு கவிஞனுக்கு தேவை அற்புதமான வர்ணனை மற்றும் இலக்கிய நயம், கொஞ்சம் மொழி போதும் அசத்திவிடலாம். அப்படித்தான் அவர் 80களில் அசத்திகொண்டிருந்தார், இன்று கேட்டாலும் அது கண்ணதாசனா, வாலியா அல்லது அல்லது இளவயது வைரமுத்துவா என யோசிக்க செய்து தேடினால், அட டி.ராஜேந்தர்.

எவ்வளவு அழகான கற்பனைகள், எவ்வளவு அழகான வர்ணனைகள், சோக பாடலோ, காதல் பாடலோ, பெண் நினைவில் உருகி பாடும் பாடலோ அவை எல்லாம் அற்புதமான படைப்புகள். அனைத்தும் பண்பட்ட வரிகள், அதில் ஆபாசமோ, காம நெடிகளோ, முகம் சுளிக்கும் வரிகளோ இருக்காது, கம்பனை படிப்பது போல அழகான சுகம். ஓரு சிலருக்கே வாய்க்கும் வரம்.

“பாவை புருவத்தை விரிப்பது அதிசயம்,
அதில் பரதமும் படிக்குது அபிநயம்” என அசத்தி செல்வதாகட்டும்,
“பாவை இதழது சிவக்கின்ற போது, பாவம் பவளமும் சிவப்பது ஏது” என வர்ணிப்பதாகட்டும்
“சந்தனக் கிண்ணத்தில் குங்கும சங்கம‌ம்
அரங்கேற அதுதானே உன் கண்ணம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில்
இரண்டு குடத்தை கொன்ட‌
புதிய தம்புராவை மீட்டி சென்றாள்”

என சொன்னதாகட்டும், டி.ராஜேந்தர் ஒரு பெரும் கவிஞர், கவிஞராக மட்டும் ஜொலித்திருக்கவேண்டியவர்.

இன்று திரையுலகில் அவர்போல் வர்ணிப்பவர் , தமிழ் இலக்கியத்தில் கரைந்த சாறு யாருமிலை, கண்ணதாசன், வாலி, நா.முத்துகுமாரின் இடத்தினை மிக எளிதாக நிரப்பும் பாடல் வலிமை அவருக்கு உண்டு. ஆனால் அவரும் எம்.ஆர் ராதாவும் ஒரே ரகம். காட்டாறுகள், வித்தை கர்வம் மிகுந்தவர்கள். எளிதில் வேலை வாங்கிவிட முடியாது, நினைத்தவாறே செய்துகொண்டிருப்பவர்கள். டி.ஆர் அப்படித்தான் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டிருக்கின்றார்.

எம்ஜிஆரும், சிவாஜியும், ரஜினியும், கமலும், ஸ்ரீதேவியும் பின்னி எடுத்த 80களில் வெறும் புதுமுகங்களை கொண்டு வெள்ளிவிழா கொடுத்து சவால் விட அவரால் முடிந்ததென்றால் அதற்கு காரணம் அவரின் பாடல். அதுதான் அவரின் தனித்திறமை, அவர் படங்களில் எல்லாம் தனித்து நிற்பது அதுதான். ஆனால் தன் ஆணிவேர் அது என தெரிந்தும் ஏன் சல்லிவேர்களை பலமாக நினைக்கின்றார் என தெரியவில்லை. டைரக்ஷனுக்கு பல பேர் இருக்கின்றார்கள், நடிக்க ஏராளமானோர் உண்டு, இசைக்கு பஞ்சமே இல்லை. ஆனால் பாடலுக்கு? அற்புதமான வரிகளை எழுதுவதற்கு மிக சிலரே உண்டு, அதிலொருவர் டி.ஆர்.

இன்றும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, பாடல் எழுத ரெடி என அவர் அறிவிக்கட்டும், அற்புதமான பாடல்களை எந்த மெட்டிற்கும் அவரால் கொடுக்க முடியும, எல்லா வித உணர்ச்சிகளாலும் கொடுக்க முடியும். ஆனால் அவரோ கதை, வசனம், சண்டை, இம்சை என எல்லா மண்ணாங்கட்டியும் நானெ செய்வேன் என அடம்பிடித்து தன் சுயதர்மத்தை இழந்துகொண்டிருக்கின்றார்.

நிச்சயமாக அவர் கவிதை ராஜாளி, உயர உயர பறக்கவேண்டியவர். ஆனால் அவரோ நான் கோழிகளோடு குப்பை மேட்டில் கிளறுவேன், சிட்டுகுருவிகளோடு தானியம் பொறுக்குவேன், தேன் சிட்டினை போல கூடுகட்டுவேன், வெறும் மைனாவினை போல தாழத்தான் பறப்பேன் என அடம்பிடிக்கின்றார்.

ராஜாளி அதற்குரிய இடத்தில் பறந்தால் அல்லவா அதற்குரிய மரியாதை, பிரமிப்பு எல்லாம் வரும்.

சரி பாடல்தான் வேண்டாம், அன்னார் நாலே நாலு கவிதை தொகுப்பு வெளியிடட்டும், இந்த மனுஷ்யபுத்திரன் போன்ற இம்சைகள் எல்லாம் எங்கு சென்று ஒழிகின்றன என்பது தெரியும். ஒரு இசை ஆல்பம் வெளியிடட்டும் இந்த ஹிப்காப் தமிழா போன்ற அழிச்சாட்டியம் எல்லாம் காணாமலே போகும். ஆயிரம் ஆயிரம் அற்புதமான பாடல்களை அவரால் தரமுடியும், ஆனால் செய்வாரா?

“நடை மறந்த கால்களின் தடையத்தை பார்க்கின்றேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கின்றேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கின்றேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கின்றேன்

வெறும் நாரில் கரம்கொண்டு பூமாலை வடிக்கிறேன்
வெறும் காற்றில் உளிகொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்துவிட்ட பொழுதில் கூட விண்மீனை பார்க்கின்றேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கின்றேன்
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவுநேர பூபாளம்…”

எப்படி அருமையான வரிகள்.

எங்களுக்கு தேவை எல்லாம் 30 வருடத்திற்கு முன்னதான டி.ராஜேந்தர் எனும் கவிதை சிங்கமே. அது இல்லா காட்டில் நரிகள் எல்லாம் கவிஞர் வேடம் போட்டு ஆடும் இம்சைகள் தாங்கமுடியவில்லை. 80களில் நீங்கள் கொடுத்த அற்புதமான வரிகளோடு கவிஞனாக வாருங்கள் டி.ஆர். உசேன் போல்ட் ஓட்டத்தில் கில்லாடி, ஆனால் அவர் எல்லா போட்டிகளிலும் பங்கெடுப்பேன் என ஜிம்னாஸ்டிக்கில் போய் நின்றால் என்ன ஆகும்?

பெல்ப்ஸ் சிறந்த நீச்சல்காரர் அவர், ஆனால் நான் உயரம் தாண்ட போகின்றேன் என்றால் என்ன ஆகும்?

செரினா வில்லியம்ஸோ, ரபேல் நடாலோ நான் குத்துசண்டைக்கும் தயார் என்றால் என்னாகும், மெஸ்ஸி கிரிககெட் மட்டை பிடித்து வாசிம் அக்ரம் பந்தினை எதிர்கொன்டால் என்னாகும்.

அதுதான் உங்கள் விஷயத்திலும் நடக்கின்றது. அவரவர் அவரவர்க்குள்ள உயரத்தில், அந்த இடத்தில் இருக்கவேண்டுமல்லவா? கவிஞனாக அடுத்த இன்னிங்க்ஸில் எங்கோ போய்விடுவீர்கள், ஒரு கவிஞனும் உங்களை தொட்டுவிடமுடியாது, கண்ணதாசன், முத்துலிங்கம், புதுமை பித்தன், பஞ்சு அருணாசலம், காமராசன், வாலி காலத்திலே தனியாக நின்று சாதித்த உங்களுக்கு இப்பொழுது இருக்கும் காலம் தூசு அல்லவா? அந்த அற்புத கவிஞனைத்தான் நாங்கள், எதிர்பார்த்து கொண்டிருக்கின்றோம். வீராசாமியினை அல்ல.

மிக மிக அற்புதமான பாடல்ளை உங்களால் கொடுக்க முடியும், எங்களுக்கு அபார நம்பிக்கை இருக்கின்றது, உங்கள் தன்னம்பிக்கை சொல்லி தெரியவேண்டியது அல்ல. வாருங்கள், வந்து கம்பனை, பாரதியினை, கண்ணதாசனை, வைரமுத்துவினை, முத்துகுமாரினை பிழிந்து ஒரே கோப்பையில் கொடுங்கள் இன்றைய தேதியில் அவ்வளவு அற்புதமான கவிஞன் எவனுமில்லை தூங்கிகொண்டிருக்கும் தமிழ்பாடல் சிங்கமே, எழும்பி இனியாவது களத்திற்கு வாருங்கள்.

வருங்காலத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதித்திருக்கின்றீர்கள் என யாரும் கேட்கபோவதில்லை, எவ்வளவு அழகான பாடல்களை கொடுத்திருக்கின்றீர்கள் என்பதில்தான் உங்கள் வரலாறு அடங்கி இருக்கின்றது.. கண்ணதாசன், பட்டுகோட்டை, வாலி, முத்துகுமார் என மறைந்த கவிஞர்களின் சொத்து மதிப்போ, அவர்களின் குடும்பமோ லெகசி எனப்படும் அடையாளமாக இல்லை. அவர்களின் முத்தாய்ப்பான படைப்புகள்தான் அவர்களின் அடையாளங்கள்.

கலைஞரின் தமிழுக்கு கூடும் கூட்டம் போலவே, உங்கள் தமிழ்பாடலுக்கும் ஒரு கூட்டம் இருக்கின்றது என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்.

அந்த தாடிக்குள் ஓளிந்திருக்கிறது, தமிழ் பாடலின் உயிர் நாடி!

-ஸ்டான்லி ராஜன்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Chennai Rockers Press meet Stills 017
Chennai Rockers Press meet Stills Gallery

Close