இரண்டு பிக் பாஸ்! நடுவுல ஒரு ஸ்மால் பாஸ்!

சினிமாவில் பாடலாசிரியர்களுக்கு நடுவில் நடக்கிற பாலிடிக்ஸ் இருக்கே… அது ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் பாலிட்டிக்சை விடவும் கொடுமையானது. வெயிட்டான கவிஞர்களாக இருந்தால் கூட அவர்களின் மனசு, நிச்சயம் ஒயிட்டா இருக்காது என்று நினைக்கிற அளவுக்கு இருக்கும் அவர்களின் பாடல் பறிப்பு நடவடிக்கை. இந்த மறைமுக மங்காத்தா ஆட்டத்தை, பொதுவெளியில் போட்டு உடைத்தார் சினேகன். இடம் – ‘குரு உச்சத்துல இருக்காரு’ பாடல் வெளியீட்டு விழா.

தாஜ்நூர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நான்கு பாடல்களை மீனாட்சி சுந்தரம் என்ற இளையவர் எழுத, ஆளுக்கொரு பாடல்களை எழுதியிருக்கிறார்கள் சினேகனும், பா. விஜய்யும். நிகழ்ச்சியில் மைக்கை பிடித்த மீனாட்சிசுந்தரம், ‘இரண்டு பிக் பாஸ்களுக்கு நடுவில் நான் ஒரு ஸ்மால் பாக்ஸ் ஆக இருந்து இந்த பாடல்களை எழுதியிருக்கேன்’ என்றார் அவர். பின்னாலேயே பேச வந்த சினேகன், இப்படியெல்லாம் பிக் பாஸ்னு ஐஸ் வச்சி எங்க வாய்ப்பை பறிச்சுடலாம்னு நினைக்காதீங்க. நாங்க எங்க இடத்தை விட்டுக் கொடுக்கவே மாட்டோம் என்றார் சிரித்துக் கொண்டே. கவிஞர்களுக்கு நடுவில் நடந்த இந்த பாடல் பறிப்பு சங்கதி, பார்வையாளர்களை முணுமுணுக்க வைத்தது தனிக்கதை.

அதற்கப்புறம் சினேகன் பேசிய வார்த்தைகள் சினிமாவுலகம் கவனிக்க வேண்டிய விஷயம். “இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிற தாஜ்நூர் மிகச்சிறந்த இசையமைப்பாளர். சும்மா பேப்பர்ல வந்த செய்தியை கட் பண்ணிக் கொடுத்தால் கூட அதையும் ஒரு பாடலாக்கிக் கொடுத்துடற அளவுக்கு திறமைசாலி. ஆனால் அவருக்கு ஒரு நிரந்தர இடம் ஏன் இன்னும் கிடைக்கல என்று நினைச்சாதான் வருத்தமா இருக்கு என்றார்.

பைசா படத்தின் ஹீரோயின் ஆராவும் புதுமுகம் குரு ஜீவாவும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இந்த குரு ஜீவா தயாரிப்பாளர் தனசண்முகமணியின் மகன்!

இந்த தலைப்புதான் இப்படியொரு படத்தை எடுக்கவே எனக்கு நம்பிக்கையும் துணிச்சலும் கொடுத்தது என்றார் தனசண்முகமணி. படத்தை தண்டபாணி இயக்கியிருக்கிறார். இவரும் ஏ.ஆர்.முருகதாசும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாம். அந்த பழக்க வழக்கத்திற்கு மரியாதை அளிக்கும் விதத்தில், இப்படத்தின் பாடல்களை வெளியிட்டு உதவியிருக்கிறார் முருகதாஸ்.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Guru Uchaththula032
Guru Uchaththula Irukkaru Movie Audio & Trailer Launch Stills

Close