திருக்குறளுக்கு நாட்டுபுற இசை! வைரமுத்து, பாரதிராஜா கலந்து கொள்ளும் விழா!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமான வாழ்வியல் பாடமாக இருந்து வருவதை, குறள் அறிந்த பலரும் ஒப்புக் கொள்வார்கள். அப்படிப்பட்ட திருக்குறளுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் தத்தமது பாணியில் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் திருக்குறளுக்கு இசை வடிவம் தர வேண்டும் என்கிற முயற்சி சொற்ப அளவில்தான் இருக்கிறது.

அதுவும் ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு மாதிரியான இசையை தருவது பெரிய சவால்தான். அந்த வகையில், இன்பத்துபாலில் இருந்து ஏழு பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு நாட்டுப் புறப் பாடல் மெட்டில் இசை சேர்த்திருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் தாஜ்நூர். ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்கள் எழுதியிருக்கும் திருக்குறள் விளக்கவுரைக்கு தாஜ்நூர் அமைத்திருக்கும் இசை, தமிழிலக்கிய உலகத்தின் பெருமைமிகு படைப்பு என்பதை பாடல்களை கேட்ட மாத்திரத்தில் ஒப்புக் கொள்ள முடியும். இந்த ஏழு குறள்களுக்கும், தாஜ்நூர் இசையமைக்க இன்னொரு புறம் தன் தூரிகையால் வண்ணம் சேர்த்திருக்கிறார் பிரபல ஓவியர் டிராட்ஸ்கி மருது.

‘நாட்டுக்குறள்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த திருக்குறள் பாடல்களை நேரடியாக மேடையிலேயே இசைத்து (லைவ்), ஒலிநாடாவாக வெளியிடும் விழா சென்னையில் நடைபெறவிருக்கிறது. நவம்பர் 27 ந் தேதி மாலை 6 மணிக்கு நாரதகான சபாவில் நடைபெறுகிறது இந்த நிகழ்ச்சி. இசை அரங்கேற்றம், பாடல் ஓவிய நூல் மற்றும் ஒலிப்பேழை வெளியீடு என்கிற அழுத்தமான உள்ளடங்கங்களோடு நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் பாரதிராஜா, நடிகரும் ஓவியருமான சிவகுமார், நீதியரசர் மகாதேவன், செல்வி பத்மா சுப்ரமணியம், ஓவியர் டிராட்ஸ்கி மருது, எழுத்தாளர் சு.தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள். சினிமா பின்னணி இசைக்கலைஞர்களும் பங்குபெறுகிறார்கள்.

விழாவில் பாடகர்கள் வேல்முருகன், அந்தோணிதாஸ், நின்சி வின்சென்ட், செல்வி கவிதா கோபி. சின்னப்பொண்ணு, மீனாட்சி இளையராஜா, பிரபு ஜினேஷ், ஆகியோர் கலந்து கொண்டு பாடவிருக்கிறார்கள்.

நிகழ்ச்சித் தொகுப்பு திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திரு சங்கர சரவணன். விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்குறளின் முதல் அச்சுப் பிரதியின் மீள் பதிப்பும் வெளியிடப்படுகிறது.

1 Comment

  1. திரைப்பிரியன் says:

    நல்ல முயற்சி. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
rj-balaji-lakshmi-ramakrishnan
ரெண்டு பொண்டாட்டிக்காரன்! சைல்ட் அப்யூசர்! யாரை சொல்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்?

வலை தளம் இப்போது கொலை தளம் ஆகிக் கிடக்கிறது. கடவுள் இருக்கான் குமாரு படத்தால், சினிமாவுலகத்திற்குள் சரியான குடுமிப் பிடி! ஒருபுறம் இப்படம் பம்பர் ஹிட் என்று...

Close