ஆஸ்பிடலில் மனைவி! கண்ணீரில் தத்தளித்த இயக்குனருக்கு கை கொடுத்த சிம்பு! நெகிழ வைத்த ஒரு நிஜ சம்பவம்!

சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன் உருவான படம் ‘கெட்டவன்’. திருச்சி பரதன் பிலிம்ஸ் தயாரிக்க, நந்து என்பவர் இயக்கினார். சிம்புதான் ஹீரோ. படப்பிடிப்பு திருச்சியில் நடைபெற்றது. பாதி பகுதியை கடந்து விட்டது படம். ஷுட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே சில பல பாலிடிக்ஸ்களால் வெளியேறிவிட்டார் நந்து. அதற்கப்புறம் தமிழ்சினிமாவும் வாழ்க்கை சக்கரமும் அடியில் படுக்கப் போட்டு நந்து மேல் வண்டி ஓட்டியது. சக்கரத்தில் ஏறலாம் என்று சினிமாவுக்கு வந்தவர் மீது சக்கரமே ஏறியது. காதல் திருமணம் செய்து கொண்டவரின் வாழ்க்கை அன்றாட அவஸ்தையாகிப் போனது.

இந்த நேரத்தில்தான் ஒரு தொலைக்காட்சியில் ஜல்லிகட்டு தொடர்பாக ஒரு விவாதம். அதில் பேசிய நந்து தன்னை நின்று போன கெட்டவன் படத்தின் இயக்குனர் என்று அறிமுகம் செய்து கொண்டார். எப்படியும் சிம்புவை கழுவி கழுவி ஊற்றுவார் என்று எதிர்பார்த்த அத்தனை நேயர்களுக்கும் அதிர்ச்சி. சிம்புவை உயர்வாகவே பேசினார் நந்து. அதற்கப்புறம் இவர் மீது கோபமாக இருந்த சிம்பு, நேரில் வரவழைத்துப் பேசினாராம்.

இவர் சிம்புவை அழைத்த நேரம், நந்து வாழ்வில் மிக மிக இக்கட்டான நேரம்.

நந்துவின் மனைவிக்கு குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்தார். பில் ஐம்பதாயிரத்திற்கு மேல். சிம்புவுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவர் எண்ணமெல்லாம் அந்த பில் பற்றியே இருந்தது. எங்கே புரட்டுவது? யாரிடம் கேட்பது? அந்த சிந்தனையிலேயே விட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தவரிடம், “உங்க முகத்தை பார்த்தா ஏதோ குழப்பத்துல இருக்கிற மாதிரி தெரியுதே?” என்றாராம் சிம்பு. அப்போது கூட அவரிடம் பணம் கேட்க வேண்டும் என்று நினைக்காத நந்து, “இல்லே… மனைவிய ஆஸ்பிடல்ல சேர்த்துருக்கேன். குழந்தை பிறந்துருக்கு. அந்த நினைப்புதான். வேற ஒண்ணுமில்ல” என்று கூறிவிட்டு திரும்பிவிட்டார்.

இவர் மருத்துவமனைக்கு வருவதற்குள் போன். எதிர்முனையில் பேசியவர் சிம்புவின் நண்பர் தீபன்“எந்த ஆஸ்பிடல்? எந்த ஏரியா?” என்றெல்லாம் விசாரித்தவர், நேரடியாக வந்து மொத்த பில்லையும் செட்டில் பண்ணியிருக்கிறார். “சிம்பு அங்கேயே உங்க கையில் கொடுக்கணும்னு நினைச்சாராம். ஆனால் நீங்க மறுத்துடுவீங்கன்னுதான் என்னை நேரடியாக அனுப்பி வச்சார்” என்று கூற, சொல்ல வார்த்தைகள் இல்லாமல் தடுமாறிப் போனார் நந்து.

சிம்பு சில விஷயங்களில் ‘கெட்டவன்’ இல்லை!

பின்குறிப்பு- நின்று போன கெட்டவன் படத்தையும் மீண்டும் தூசு தட்ட நினைக்கிறாராம் சிம்பு. எப்பவோ எடுக்கப்பட்டு இன்றும் பாதுகாக்கப்பட்டு வரும் அந்தப்படத்தின் காட்சிகளை மீண்டும் பார்க்கவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக லேப் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன. அச்சம் என்பது மடமையடா வெற்றியை தொடர்ந்து சிம்புவுக்கு நல்ல நேரம் மீண்டும் துவங்கியுள்ள இந்த நேரத்தில் கெட்டவன் பற்றிய பழைய நினைப்பு அவருக்கு வருவதும் கூட, நல்ல சைன்தான்!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
01
இதோ இன்னொரு தேசப்பற்றுப் படம்: பிரமாண்ட கடலடிக் காட்சிகளால் கலக்க வருகிறது ‘காஸி’

Close