சிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா?

பற்றிக் கொண்டு எரிகிறது சோஷியல் மீடியா! அஜீத் ரசிகர்கள் கொப்பளித்துப் துப்பியதில் அநியாயத்துக்கு டஸ்ட் அலர்ஜிக்கு ஆளாகியிருக்கிறார் சிம்பு. அஜீத்திற்கு ஒண்ணுன்னா ஆகாயத்தை புட்டுருவோம் என்று முண்டா தட்டும் அவருடைய ரசிகர்கள், “நீ யார்றா எங்க தலய தூக்கிவிடுறது?” என்று கேட்டு கேட்டு கிறுகிறுக்க வைத்துவிட்டார்கள்.

“யாருமே அஜித்தை பற்றி பேசாத சமயத்தில் நான் அவருடைய படத்தின் கட்அவுட்டை வைத்து ‘தல தல’ என்று கத்தினேன். இப்போது அவரைப் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால், இனிமேல் என்னுடைய படங்களில் தல பற்றி பேசத் தேவையில்லை. அவருடைய வளர்ச்சிக்கு மகிழ்ச்சி” என்று கூறியிருந்தார் சிம்பு. அதையடுத்துதான் இத்தகைய எதிர்வினை. ஊழ்வினை. செய்வினை. செயபாட்டு வினை எல்லாம்!

நிஜத்தில் சிம்பு அவ்வாறு பேசியதற்கு பின்னால் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அந்த காரணமாக நிற்பவர் விஜய்தான். சிம்புவின் வாலு படம் வெளியாகிற நேரத்தில் சுமார் பத்து கோடி கடனை அடைத்தாக வேண்டிய நிலையில் இருந்தார் டி.ஆர். தினந்தோறும் பஞ்சாயத்து நடந்தது. திடீரென ஒரு நாள் விஜய்யிடமிருந்து போன். “நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று. அத்துடன் அவரே சில விநியோகஸ்தர்களிடம் பேசி, சில பல லட்சங்களை குறைக்க வைத்தார். மிரட்டல் வட்டியை பெருமளவு கம்மி செய்தார். இதுதான் எல்லாவற்றுக்கும் திருப்பு முனை.

மாதத்திற்கு ஒருமுறையாவது திருப்பதிக்கு செல்வது போல அஜீத் வீட்டுக்கு சென்று வந்த சிம்பு, அதற்கப்புறம் அந்தப்பக்கம் போவதையே நிறுத்திக் கொண்டார். மாறாக சிம்பு விஜய் சந்திப்புகள் தொடர்ந்தன. விஜய்யின் சர்பிரைஸ் பார்ட்டிகளில், ஸ்பெஷல் விருந்தாளியானார் சிம்பு. விரைவில் அவரது அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் வெளியாகப் போகிறது. இந்த நிலையில் கூட தனது மன மாற்றத்தை நாட்டுக்கு தெரிவிக்காவிட்டால் எப்படி? அதனால்தான் தெரிவித்திருக்கிறார். இனி சிம்புவின் கூட்டணி விஜய் ரசிகர்களுடன்தான்!

பார்த்து ஹெல்ப் பண்ணி படத்தை ஓட விடுங்க தோழர்களே…

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter