சைவம்- விமர்சனம்

‘படத்துல கதையவே காணலப்பா’ என்று சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குனர்களே தேடித் திரிகிற பொல்லாத காலம் இது! இந்த காலத்தில், ஒரு சேவல் காணாமல் போனதை வைத்துக் கொண்டு ஒரு விறுவிறுப்பான, அழகான, கவித்துவமான கதையை உருவாக்கியிருக்கிறார் டைரக்டர் விஜய். படம் துவங்கி முடிகிற வரைக்கும் அந்த கோழியை தேடி நாமும் ஓடிக் கொண்டிருக்கிறோம். வில்லேஜ் அழகானது. வில்லேஜ் கதைகள் அதைவிட அழகானவை! இந்த கதையை எந்த நேரத்தில் படமாக எடுக்க நினைத்தாரோ, அந்த நேரம்தான் தமிழ்சினிமாவின் விடியலை ஊருக்கு சொன்ன ‘கொக்கரக்கோ’ நேரமாக இருக்க வேண்டும். பாராட்டுகள் விஜய்…!

காரைக்குடி செட்டிநாட்டு ஆச்சி, சந்தைக்கு போய் மீன், கோழி, நண்டு, போன்ற அத்தனை ஊர்வன பறப்பன சமாச்சாரங்களையும் சமைப்பதற்கு வாங்குவதாக துவங்குகிறது படம். முடியும் போது ‘நாங்க எல்லாரும் சைவத்துக்கு மாறிட்டோம்’ என்று அறிவித்துவிட்டு தக்காளி, பூசணி, இன்ன பிற காய்கறிகளை வாங்குகிறார் ஆச்சி. ஒரு சிறுகதையின் துவக்கத்தையும் முடிவையும் உள்ளடக்கிய இந்த ஒரு வரி கதையை சுவாரஸ்யமான இரண்டரை மணி நேரமாக படமாக உருவாக்க முடியுமா? பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் பாடமே நடத்தலாம் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை வைத்து! அப்படியொரு நேர்த்தி படம் முழுக்க!

உலகமே சைவத்திற்கு மாறிட்டா உணவு சுழற்சிக்கு அர்த்தமே இருக்காதே என்றெல்லாம் லாஜிக் பேசும் அறிவியல் வித்தகர்களுக்கு…. இந்த படம் ஒரு குழந்தைக்கும் கோழிக்குமான பாசாங்கில்லாத அட்டாச்மென்ட்டைதான் சொல்ல வந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, அந்த குழந்தையின் மீதும், அந்த குடும்பத்தின் மீதும் குடும்பத் தலைவர் நாசர் கொண்டிருக்கும் மதிப்புதான் படத்தின் முடிவே ஒழிய, வேறெந்த வியாக்கியானங்களுக்கும் இங்கு வேலையில்லை. ப்ளீஸ்…

கிராமத்திலிருக்கும் ஆச்சியின் வீட்டுக்கு பெண்டு பிள்ளைகள் எல்லாரும் லீவுக்கு வருகிறார்கள். அப்படி வரும்போதுதான் கோவில் திருவிழாவை உற்சாகமாக கொண்டாட முடியும். அப்படி கொண்டாட தயாராகிறது அந்த குடும்பம். அந்த குடும்பத்திலிருக்கும் வாண்டு சாரா அந்த வீட்டில் வளரும் சேவல் பாப்பாவை ஒரு தோழியை போல நேசிக்கிறாள். (அந்த வீட்டில் வளரும் ஒவ்வொரு பிராணிக்கும் ஒரு பெயர் இருக்கிறது. சேவலுக்கு பெயர் பாப்பா…) எல்லாரும் கோவிலுக்கு போகும் நேரத்தில், அங்கு சில கெட்ட சகுனங்கள் நடக்க, ‘குல தெய்வத்துக்கு ஏதோ குறை வச்சுருக்கீங்க. அதை செஞ்சுட்டு வாங்க’ என்கிறார் பூசாரி. நிஜத்தில் அந்த சேவல் பாப்பாவை கருப்பசாமிக்கு படைப்பதாக வேண்டுதல் இருக்கிறது அந்த குடும்பத்திற்கு. அதனால்தான் அத்தனை சகுன தடையும் என்று நம்பும் குடும்பம் கோழியை பலி கொடுக்க நாள் குறிக்கிறது. ஆனால் திடீரேன பலி சேவல் காணாமல் போக, ஒரே களேபரம்.

மொத்த வீடும் சேர்ந்து பாப்பாவை தேட, அந்த வீட்டு பாப்பாவான சாராதான் அந்த சேவல் பாப்பாவை மறைத்து வைத்திருக்கிறாள். பல நாள் தேடலுக்கு பிறகு ஒரு நாள் உண்மை தெரிகிறது. சாராவின் மனசு நோகக்கூடாது என்பதற்காக எல்லாருமே சேவலை பலி கொடுக்க தயங்க, குடும்ப தலைவரான நாசருக்கு தெரியவரும்போது கோழியின் ஆயுள் முடிந்ததா? இல்லையா? க்ளைமாக்ஸ்!

இந்த படத்தின் ஆகப்பெரிய பலமே ஸ்டார் காஸ்டிங்தான். வேலைக்காரி வேலைக்காரன் முதல், அமெரிக்க ரிட்டர்ன் மகள், பேரன் பேத்திகள் வரைக்கும் எல்லாரும் இந்த கதைக்காகவே பிறந்த மாதிரி இருக்கிறார்கள். அவ்வளவு கச்சிதம். அதிலும் பிரகாஷ்ராஜின் குட்டி ஜெராக்ஸ் போல வரும் அந்த அமெரிக்கா குழந்தையிடம் இருக்கிற மிதப்பு இருக்கிறதே, ரசித்து ரசித்து சிரிக்கலாம். ஏரியை ஸ்மால் பீச் என்று ஏமாற்றுகிற வேலைக்காரரிடம் அவன் பேசும் இங்கிலீஷ், அஹ்ஹஹ்ஹா…

பேத்திக்கும் சேவலுக்குமான அட்டாச்மென்ட்தான் முழு படமும் என்றான பிறகு, சாராவின் தலையில்தான் மொத்த பாரமும் ஏற்றப்படுகிறது. சின்னக்குழந்தைதான்… என்னமாய் நடிக்கிறாள்? இன்னும் கொஞ்ச நேரத்தில் சேவல் அவர்களுக்கு கிடைத்துவிடுமே என்கிற பதற்றத்தை அவ்வளவு படபடப்போடு சொல்லிவிடுகிறது அவளது கண்களும் புருவமும். அந்த சேவலை காப்பாற்றும் பொருட்டு குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த குழந்தை போடுகிற தோப்புக்கரணம், நெஞ்சை பிளக்கிறது.

சேவலை தேடிக் கிளம்பும் குடும்ப உறுப்பினர்கள் ஒரு கட்டத்தில் அந்த ஊரையே சண்டை காடாக்கிவிட்டு திரும்புவதெல்லாம் செம கலகலப்பு. இந்த கோழி டிராவலுக்கு நடுவில் ஒரு அழகான காதல் டிராவலையும் செருகியிருக்கிறார் டைரக்டர் விஜய். ஆனால் அதில் துளி கூட ஆபாசம் இல்லை. பாராட்டுகள் சகோ… நாசரின் மகன் பாஷாவும், துவாரகாவும் பளிச்சென பொருத்திக் கொள்கிறார்கள் அந்த காதலில்!

வேலைக்காரராக வரும் ஜார்ஜ் இதற்கு முன்பும் பல படங்களில் நடித்திருந்தாலும், இப்படத்திலிருந்து சம்பள உயர்வுக்கு தகுதியான சர்வென்ட் ஆகிறார். ‘கலகலப்பா இருந்த வீடு. அய்யாவை இப்படி பார்க்க முடியல’ என்பதற்காகவே அவர் ‘பாப்பா கிடைச்சிருச்சு’ என்று கூவி கூப்பாடு போடுவதும், அதற்கப்புறம் துக்கம் தொண்டையை அடைக்க உண்மையை சொல்வதும் அழகான காட்சி.

ஒரு கண்டிப்பான தாத்தா எப்படியிருப்பாரோ, அப்படியே இருக்கிறார் நாசர். பேத்தியை அப்படியே முறைத்து, அவள் தோப்புக்கரணம் போட துவங்கியதும் அப்படியே நெகிழ்ந்து சிரிப்பதெல்லாம் அவரது அனுபவத்திற்கு பெரிய நடிப்பில்லைதான். ஆனால், கை தட்டல்களால் கலங்குகிறது தியேட்டர்.

பாடல்களிலும் பின்னணி இசையிலும் வெகு காலம் கழித்து மனம் கவர்கிறார் ஜி.வி.பிரகாஷ். மியூசிக்குக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரியை விட, டைரக்டர் விஜய்க்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி இதே போல தொடர வாழ்த்துக்கள்.

படத்தின் டிசைனர் தொடங்கி ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, எடிட்டர் ஆன்ட்டனி உள்ளிட்ட அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களும் கைகுலுக்கப்பட வேண்டியவர்களே.

டைரக்டர் விஜய், கருப்பனுக்கு கூட படைக்க வேண்டாம். அதெல்லாம் செய்யாமலேயே சைவத்திற்கு கைநிறைய விருதுகள் கிடைக்கும். அப்படியே கல்லா நிறைய கலெக்ஷனும் கிடைக்கும்!

-ஆர்.எஸ்.அந்தணன்

3 Comments

  1. இந்த திரைப்படத்துக்கு இது அதீதமான புகழ்ச்சி… எனக்கு ஏனோ அப்படி ஒன்றும் சிறப்பாக இருப்பதாக தோன்றவில்லை…

  2. ajayanbala says:

    the best review so for to saivam .. every one happy in saivam office after reading your review .. thanku once more

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
ajith-vijay
நிஜத்தில் வென்றவர் அஜீத்தா, விஜய்யா?

சரியா, தவறா? உண்மையா, பொய்யா? இருக்குமா, இருக்காதா? என்பது போன்ற ஏகப்பட்ட ஐயங்களை கிளப்பிவிட்டிருக்கிறது ஒரு கிசுகிசுப்பு. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே முன்னணி வார இதழில்...

Close