ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 பேருக்கு பணி ஆணை

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணை அளிக்கப்பட்டது.
ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை கிவ்ராஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவரத்தன்முல் சோர்டியா, “மெடி சேல்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் மாருதி, எச்.டி.எஃப்.சி., சுந்தரம் ஃபைனான்ஸ், கோடக் மகேந்திரா, லேன்சன், வாசன் கண் மருத்துவமனை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை உள்ளிட்ட 53 நிறுவனங்கள் அரங்கங்களை அமைத்து பணியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். இதில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 510 மாணவர்களுக்கு உடனடியாக வேலை வழங்கப்பட்டதற்கான ஆணைக் கடிதம் அளிக்கப்பட்டது.
இது குறித்து ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளையின் தலைவர் ராஜேந்திர பொகாடியா கூறியது:
எங்களது அறக்கட்டளையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் திட்டத்தை 1963-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறோம்.
இதுவரை இத்திட்டத்தின் மூலம் 85,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். புத்தகங்களை அளித்து மாணவர்களுக்கு கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறோம்.
இதன்மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற முடியும். இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்களை வரும் காலத்தில் அதிகமாக நடத்துவோம் என்றார்.

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter