கூட்டத்தை காட்டிட்டீங்க? இனி லாடம் கட்ற வரைக்கும் இதே ரிப்பீட்தான்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம், இந்தியாவை மட்டுமல்ல…. உலகப்புகழ் ஓபாமாவையே அசர வைத்த தமிழ் இளைஞர்கள், வரலாற்றின் நாக்கில் வசம்பை வைத்து தேய்த்துவிட்டார்கள். இனி எத்தனை ஜென்மம் ஆனாலும், இந்த ‘உரைப்பு’ மறக்காது! அதற்கப்புறம் தெருவில் ஜீன்ஸ் பேன்ட்டுகள் நாலு பேரோ ஐந்து பேரோ எங்கு கூடினாலும், லட்டியோடு எட்டிப்பார்த்து ‘கலைஞ்சுருங்க தம்பிகளா…’ என்று போலீஸ் முறைக்கிற அளவுக்கு போய்விட்டது கூட்ட அலர்ஜி.

ஆனால் இந்த இளைஞர் கூட்டத்தை அப்படியே டிக்கெட்டுகளாக மாற்றுகிற வித்தையை கையில் எடுத்துக் கொண்டார்களோ என்று அஞ்சுகிற அளவுக்கு ஜல்லிக்கட்டு களத்தை திரைக்குக் கொண்டு வர கிளம்பிவிட்டது கோடம்பாக்கம். “100 காளை மாடு வேணும். கிடைக்குமா?” என்று தெருத் தெருவாக அலைகிறார்களாம் புரடக்ஷன் மேனேஜர்கள். ஏன்? சினிமாவுக்கான செயற்கை ஜல்லிக்கட்டுக்கு காளைகள் வேண்டுமல்லவா? அதற்காகதான்.

ஒரே நேரத்தில் நான்கு படங்கள் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகி வருகின்றன. சமுத்திரக்கனியின் தொண்டன், விஜய் சேதுபதியின் கருப்பன், ஆர்யா அமீரின் சந்தனத் தேவன், விஜயகாந்தின் வாரிசு சண்முக பாண்டியனின் மதுரக்காரன் ஆகிய இத்தனை படங்களிலும் கட்டாயம் ஜல்லிக்கட்டு இளைஞர்களின் நிஜமான க்ளிப்பிங்ஸ் உண்டு. அதற்காகதான் வேணும் வேணும் என்கிற அளவுக்கு சேனல்கள் எடுத்து வைத்திருக்கிறதே? பல அசிஸ்டென்ட் டைரக்டர்கள் சேனல்களுக்கு படையெடுத்து, கொஞ்சம் ஜல்லிக்கட்டு கிளிப்பிங்ஸ் வேணும். கொடுக்கிறீங்களா? என்று தவம் கிடக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு நல்ல விஷயம் நடந்துவிட்டால், அதையே ரிப்பீட் பண்ணி பண்ணி போரடிக்க வைக்கிற சினிமாக்காரர்கள், இந்த ஜல்லிக்கட்டையும் விட்டு வைக்கவில்லையே, நாராயணா….!

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
kalaiyarasan yeithavan
மிஸ்டர் இளிச்சவாயனா கலையரசன்? பொதுமேடையில் ‘டவுட்’ கிளப்பிய விநியோகஸ்தர்!

Close