முப்பதடி அகலம்! முங்க முங்க தண்ணி! ப்ரியா ஆனந்தை போட்டு இம்சித்த டைரக்டர்!

அணையப் போற விளக்குதான் அநியாயத்துக்கு பிரகாசிக்கும்னு சொல்வாங்க. தமிழ்சினிமாவில் ப்ரியா ஆனந்தின் மார்க்கெட், கிட்டதட்ட அணையப்போற நேரத்துலதான் ‘முத்துராமலிங்கம்’ என்றொரு படத்தை வழங்கியது காலம்! (காலம் வழங்குச்சா, கவுதம் கார்த்திக் வழங்குனாரா என்றால் மையமாக சிரிக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ராஜதுரை. எல்லாம் கவுதம் கார்த்தியின் பிரஷர்)

“நல்லவேளை… ப்ரியா ஆனந்துதான் எனக்கு ஜோடின்னு வம்படியா நின்றார் கவுதம். இல்லேன்னா நாங்க ஒரு நல்ல நடிகையை இந்த படத்தில் யூஸ் பண்ணாம போயிருப்போம்” என்று கூறிய ராஜதுரை, அதற்கப்புறம் சொன்னதுதான் ஆல் கிளாஸ் ஆஹா! “படத்துல சிலம்பம் சண்டைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கோம். இதற்காக நாற்பது நாள் சிலம்பம் கத்துகிட்டார் கவுதம். பைட் காட்சிகள் அவருக்கு மட்டுமில்ல. படத்தின் ஹீரோயினான ப்ரியா ஆனந்துக்கும் இருக்கு. ஒரு சீன்ல முப்பது அடி அகலமுள்ள கிணத்தை தாண்டணும். நாங்க தயங்கி தயங்கி ப்ரியாகிட்ட சொல்ல, நான் ரெடி என்று இடுப்பில் ரோப் கட்டிக் கொண்டு தயாராகிட்டார் அவர். அப்படியொரு போல்டான பெண்ணை நான் பார்த்ததேயில்ல”.

“அவ்வளவு ஆழமான கிணறை எட்டிப் பார்க்கிற யாரும், தாண்ட யோசிப்பாங்க. ஒரே ஷாட்ல அதை எடுத்து முடிக்க உதவினார் ப்ரியா ஆனந்த்”. இப்படி தன் படத்தின் ஹீரோயின் புகழை பாடிய ராஜதுரை, ‘முத்துராமலிங்கம்’ படத்தின் இசைக்காக இளையராஜாவை அப்ரோச் பண்ணினாராம். கதையை கேட்ட ராஜா, அடுத்த ஒரு மணி நேரத்தில் கம்போசிங்கில் அமர்ந்துவிட்டார்.

முத்துராமலிங்கம்னு தலைப்பு. மதுரை பேக்ரவுண்ட். கதை கண்டிப்பா சாதி பின்னணியில்தான் இருக்கும் என்ற நம் நம்பிக்கையை ஒரேயடியாக மறுக்கிறார் அவர். இல்லே இல்லே… என்று அவர் சொன்னாலும், ‘முத்துராமலிங்கமடா…’ என்று கமல் வாய்சில் உருவான அந்த பாட்டு சொல்லுது…

“டைரக்டர் பொய் சொல்றாருடோய்….”

 

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
img_7783
Enkitta Mothathe Stills Gallery

Close