பொதுவாக என் மனசு தங்கம் / விமர்சனம்

சட்டைய மாத்திப் போட்டுட்டா சங்கரு குமாராகிடுவாரா? இல்ல குமாருதான் சங்கராகிடுவாரா? இந்த உண்மை புரியாமல் சிவகார்த்திகேயனின் சட்டையை மாட்டிக் கொண்டு, பேய் முழி முழிக்கிறார் உதயநிதி. முதன் முதலாக ஒரு வில்லேஜ் உதயநிதி! சட்டை பளபளத்த அளவுக்கு நடிப்பு பளபளக்காததன் காரணம்…. பொருந்தா கூட்டணியே அன்றி வேறில்லை பராபரமே!

தன் தங்கையை லவ் பண்ணி கடத்திக் கொண்டு போனவனின் ஊரை, ‘என்னதான் இருந்தாலும் மாப்பிள்ளை ஊராச்சே?’ என்று மாலீஷ் போட்டு தேய்க்கிறார் பணக்கார பார்த்திபன். தற்பெருமை ஆசாமியான பார்த்திபனின் வீக்னெஸ் அறிந்து அடிக்கிற(?) ஊரும், மக்களும், வாட்டர் டேங்க்… ஆஸ்பிடல்… என்று அவர் பணத்தில் வாழ்கிறார்கள். ‘பக்கத்து ஊர் இப்படி சவுக்யமா இருக்கே, நாம அவரு மகளை ரூட் விட்டு, நம்ம ஊருக்கு ஏதாவது நல்லது பண்ணுவோம்’ என்று காதலில் குதிக்கிறார் உதயநிதி. நடுவில் இந்த ஊர் சாமியை அந்த ஊர் ஆசாமிகள் கடத்திக் கொண்டு போக, இரண்டு சாமிகளும் ஒண்ணு சேர்ந்துச்சா என்பது கிளைமாக்ஸ்.

கதையில் வெயிட் இல்லாவிட்டாலும், காட்சிகளில் வெயிட் ஏற்றுவோம் என்று நினைத்திருக்கிறார் டைரக்டர் தளபதி பிரபு. படம் முழுக்க கூட்டம் கூட்டமாக மக்கள். ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள். (செலவு அந்துருக்கும்!)

நல்லவேளை… உதயநிதி கைவிட்ட இடத்தையெல்லாம் தன் சொல்லாடலால் நிரப்பியிருக்கிறார் பார்த்திபன். அவர் வருகிற காட்சிகள் எல்லாவற்றிலும் பார்த்திபன் ஸ்டைல் டயலாக்குகள். “இப்படி மொட்டையா சொன்னா எப்படி?”ன்னு மொட்டை ராஜேந்திரனிடமும், பாட்டில் மூடியை கையில் கொடுத்து, “மூடிட்டு போ…” என்று மயில்சாமியிடமும், போகிற போக்கில் நாவாட்டம் போடுகிறார் பார்த்திபன். இப்படியொரு கலர் சட்டை பார்த்திபனிடம், வடிவேலு மாதிரி ஒரு ஆள் சிக்கியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? பட்…. மயில்சாமி மேனேஜ் பண்ணியிருக்கிறார். கிரேட்!

லேசாக மீசை முறுக்கிய உதயநிதிக்கு வருகிற திடீர் லவ்வுக்கு லாஜிக் இல்லையென்றாலும், காதல்… ஊடல்… சரியான நேரத்திற்கு டூயட் என்று கடமையை நிறைவேற்றியிருக்கிறார். ஒரு நடிகன், எல்லா வகையான படத்திலும் காலூன்றி நிற்க வேண்டும் என்கிற அவரது கொள்கைக்கு, ‘தங்கமான’ முதலீடாக இருந்திருக்க வேண்டிய படம்.

சிவகார்த்திகேயனுடன் சேரும்போதெல்லாம் மின்னும் சூரிக்கு, உதயநிதி காம்பினேஷனில் மட்டும் ஓரிரு மார்க்குகள் குறைச்சல்தான்! ஒரு ஊர்ல ரெண்டு சூரியன் இருக்க முடியாதே? ஐயோ பாவம்… இன்னொரு சூரியனாக என்ட்ரி கொடுத்த பார்த்திபனால் சூரிக்கு கஷ்டம்.

நிவேதா பெத்துராஜுக்கு சிட்டி பெண் லுக்தான் பொருத்தம். அடுத்த இயக்குனர்கள் அதை உணரும்போது, நிவேதாவுக்கும் ஒரு இடம் கிடைக்கும்!

பாலசுப்ரமணியென் ஒளிப்பதிவில், முதன் முறையாக பளிச் கம்மி. டிஇமான் இசையில் பாடல்கள் டெம்ப்ளட் என்றாலும், அவருக்கென இருக்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கு எல்லா பாடல்களும் ஆறுதல் பரிசுதான்.

மனசு தங்கமாக இருக்கலாம். மார்க்கெட்டும் அப்படியிருக்க வேண்டும் என்றால், கதை கேட்கிற விஷயத்தில் கெடுபிடி காட்டணும். புரியுதா எங்க சின்னத் தளபதி?

-ஆர்.எஸ்.அந்தணன்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
VIP2 Review
விஐபி 2 விமர்சனம்

Close