பட்டைய கிளப்பணும் பாண்டியா- விமர்சனம்

விஜய் என்ற சுறாவை மேய்த்துவிட்டு ஒரேயடியாக நெத்திலிக்கு இறங்கியிருக்கிற எஸ்.பி.ராஜ்குமாரின் படம்! ‘சுறா பெரிசா, நெத்திலி பெரிசா?’ என்றெல்லாம் கேள்வி கேட்டு கிர்ர்ர்ர்…ராக தேவையில்லை. நெத்தியடியாக இருக்கிறது இந்த நெத்திலி! படம் முடிந்து வெளியே வருவதற்குள் முப்பத்திரண்டு பற்களில் மூன்றுக்காவது ‘சுளுக்கு’ நிச்சயம்! உபயம்… சூரி அண்டு கோவை சரளா. வெறும் துணுக்கு தோரணமாக இல்லாமல், படத்தில் செங்கல் சிமென்ட் ஜல்லி கலவையுடன் செமத்தியான ஒரு ஸ்டோரியும் இருப்பது கூடுதல் போனஸ்.

பழனி டூ பாப்பம்பட்டிக்கு போகிற பஸ் ரூட்! அதில் பயணிக்கும் நர்ஸ் ஒருத்தியை லவ் பண்ணுகிறார் டிரைவரான ஹீரோ. அவளோ முறுக்கிக் கொண்டு திரிய, விடாமல் துரத்துகிறது பஸ். ‘காரணத்தை சொல்லு. கம்முன்னு போயிடுறேன் என்று டிரைவர் கேட்க ‘எனக்கு உன்னை புடிக்கல’ என்கிறாள் முகத்திற்கு நேரே. அதற்கப்புறம்தான் தெரிகிறது, அவள் ஏன் காதலை வெறுக்கிறாள் என்று. அவளை கவலைப்பட வைத்த அந்த முடிச்சை அவிழ்த்து இறுதியில் மூன்று முடிச்சை போடுகிறார் ஹீரோ. சுபம்!

அந்த டிரைவர் விதார்த். அவர் காதலிக்கும் நர்ஸ் மணிஷா யாதவ். ‘இப்ப பாரேன்… பஸ்சை நிறுத்திட்டு ஏதோ ரிப்பேர் ஆன மாதிரி நடிப்பானுங்க. இப்ப பாரேன்… அவனுக்கும் கண்டக்டருக்கும் சண்டை வரும். இப்ப பாரேன்…’ என்று பஸ்சில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்களை ஒரு கேரக்டர் சொல்லிக் கொண்டேயிருக்க, அட ஆமாண்ணே. என்று வியக்கும் போதுதான், ஹீரோயினும் அவள் தோழியும் ஓடி வந்து பஸ் ஏறுகிறார்கள். ‘போலாம் ரைட்’. இப்படி வில்லேஜ் பஸ்சில் வின்ட்டேஜ் கலக்கும் நகைச்சுவைகளை அள்ளி அள்ளி தெளிக்கிறார் எஸ்.பி.ராஜ்குமார். மனுஷன் ஏற்கனவே வடிவேலுவுக்கு ‘டிராக்’ எழுதியவராம். புரிஞ்சுருச்சு புரிஞ்சுருச்சு! ஒரு ஜோக் அடங்கி சிரித்து முடிப்பதற்குள் அடுத்ததை அவிழ்த்துவிடுகிறார். தியேட்டரே கந்தர்கோலமாகிறது.

அதிலும் கண்டக்டர் சூரி, பஸ்சில் வரும் ஒரு குடும்ப குத்துவிளக்கிடம் போன் நம்பர் வாங்கி தொலைபேச, ‘நீங்க எந்த…?’ என்று ஆரம்பித்து ‘அன்னைக்கு போலீஸ் ரைட் வந்தப்ப விட்டுட்டு ஓடினியே அவனா? இவனா?’ என்று கேள்வியாய் கேட்கிறது அது. நாலைந்து செல்போன் சகிதம் அது தொழில் செய்கிற லட்சணம் தெரிய…. சூரி முகத்தை பார்க்க வேண்டுமே? இவர் ஒருபக்கம் என்றால், விதார்த், சூரி அண்ணன் தம்பிகளின் அருமை அம்மா கோவை சரளா! எல்லா படத்திலும் ஒரே ஸ்லாங்கில் அவர் பேசினாலும், சிரிக்காமலிருக்க முடிகிறதா என்ன? புரட்டி புரட்டி எடுக்கிறார் கோவை சரளா. அதிலும், தன் கணவன் இளவரசுக்காக பெத்த பசங்களிடமே சரக்கு டம்ளரை நீட்டுகிற ஒரு காட்சி போதும். (ஆமாம்… படம் முழுக்க டாஸ்மாக்கோட பிராண்ட் அம்பாசிடர் மாதிரி எல்லா பேரும் குடிக்கிறாங்களே… ஏன் டைரக்டரே?)

மணிஷாவுக்கு வீட்டில் கண் தெரியாத அக்கா. அப்பாவும் மர்கயா. வீட்டை எழுதிக் கொடுக்க சொல்லி ரவுடிகள் மிரட்டல். இவ்வளவு சோகத்தையும் வைத்துக் கொண்டு அவர் ஏன் லவ் பண்ண வேண்டும்? அதானே… நியாயம்தானே? என்றெல்லாம் நம்மை நினைக்க விடுகிறார்கள். சரி… ஆனால் அவரது லோ-ஹிப் ஸாரியும், லோ கட் பிளவுசும், ‘ஐ ஆம் சாரி ’ சொல்ல வைக்கிறதே டைரக்டர்? இருந்தாலும் பாவம் போல ஒரு முகத்தை வைத்துக் கொண்டு இதுபோன்ற லாஜிக்குகளை அடித்து உடைக்கிறார் மணிஷா.

இந்த படம் விதார்த்தின் மார்க்கெட்டில் ஒரு குளூக்கோஸ் பாட்டிலை ஒரே மூச்சில் ஏற்றுவது உறுதி உறுதி…

படத்தில் மற்றுமொரு நல்ல டிரைவரை காண்பிக்கும் போதே புரிந்து விடுகிறது, மணிஷாவின் அக்காவுக்கு இவர்தான் மாப்பிள்ளை என்று. அப்புறமும் நீட்டி முழக்க வேண்டியிருக்கிறது. என்னதான் செய்வார் டைரக்டரும்? மணிஷாவின் அக்காவாக நடித்திருக்கிறார் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்த ஸ்வேதா. (நான்தான் பாலா படத்தில் விவேக்குக்கு ஜோடியாக வருவாரே, அவரேதான்) ஆனால் இந்த படத்தால் தம்படி பிரயோஜனம் இல்லை அவருக்கு! இந்த கேரக்டரை ஒரு துணை நடிகை செய்துவிட்டு போய்விடலாம் ஈஸியாக.

பொதுவாகவே முத்துக்காளையை பார்த்தால், எரிச்சல் பொத்துக் கொண்டு வரும். அவரையே ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார். ஐ யம் க்ரிஷ் என்று கூறிக் கொண்டு கையில் ஒற்றை ரோசாவுடன் அவர் வருகிற காட்சி, நமக்கே சொரேர் என்றால் மணிஷாவுக்கு? உட்கார்ந்த இடத்திலேயே ஒரு நாள் கால்ஷீட்டுக்கு மாரடித்திருக்கிறார் டி.பி.கஜேந்திரன். ‘குழந்தைகளின் சூப்பர் ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் டைட்டிலில் வரும் இமான் அண்ணாச்சி, நிஜமாகவே இந்த ஒரு படத்தில்தான் சிரிக்க வைத்திருக்கிறாரப்பா….!

இசைக்கு மார்க் போடலாமா? ஒளிப்பதிவுக்கு போடலாமா? என்றால், முன்னால் வந்து மாலையை ஏற்றுக் கொள்கிறார் ஒளிப்பதிவாளர் மூவேந்தர். இசை…? தம்பி. இன்னும் கொஞ்சம் மீஜிக்கை தரவா படிச்சுட்டு அப்புறம் வாங்க!

கொடுத்த பணத்துக்கு கோக்கும் பாப்கார்னும் போதும் என்று நினைப்பவர்கள் வேறு தியேட்டருக்கு போங்க. நல்லா சிரிச்சுட்டு நாலு இருமலோட திரும்பணும் என்று நினைப்பவர்கள் மட்டும் பட்டய கௌப்பலாம்…. தைரியமா போங்க!

-ஆர்.எஸ்.அந்தணன்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
kannadi pommaigal
Kannadi Bommaigal Movie Trailer

https://www.youtube.com/watch?v=1c5Bzh8WGis

Close