முன்னோடி / விமர்சனம்

உன் ‘முன்னோடி’ ஒரு ரவுடியாக இருந்தால், வெட்டும் ரத்தமும்தான் உனக்கு மிச்சம்’ என்பதுதான் இப்படத்தின் ஆகப்பெரிய நீதி. கோணலாக வளரும் தென்னை மரத்தால், பக்கத்து வீட்டுக்காரனுக்கே பயன் ஜாஸ்தி. அப்படியொரு மரமாக வளரும் ஹீரோ ஹரீஷ், அந்த ஊரின் மிகப்பெரிய ரவுடி அர்ஜுனாவுக்கு லெஃப்ட் ரைட் ஹேண்டாக இருக்கிறார். ஒரு மகனை போலவே அவரை ரசிக்கும் அந்த ரவுடியே ஒரு கட்டத்தில் எதிரியாக வந்து நின்றால் என்னாகும்? சொந்த தம்பியை எதிரியின் கத்திக்கு பறிகொடுத்துவிட்டு குற்றவுணர்ச்சியில் தவிக்கும் ஹரீஷ் எடுக்கும் முடிவு என்ன? இதுதான் இரண்டரை மணி நேர முன்னோடி!

யாரிடமும் உதவி இயக்குனராக பணி புரிந்து பழக்கமில்லையாம் இப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.டி.ஏ.ராஜ்குமாருக்கு. நேர்த்தியான வேகத்தோடும், தடுமாற்றமில்லாத திரைக்கதையோடும் ஒரு படத்தை தர முடிந்திருக்கிறது அவரால். அதற்காகவே ஒரு செல்ல சதக் சதக்… (படம் பார்த்த எபெக்ட்)

விபரம் தெரியாத பருவத்திலிருந்தே தன் தம்பி மீதும், அம்மா மீதும் படு கோபத்துடன் திரியும் ஹரிஷ், காட்டேரி பிடித்த எபெக்ட்டுடனேயே திரிகிறார் முக்கால்வாசி படத்திலும். நல்லவேளை… காதல் என்ற பூ பூக்கிறது அவர் மனசுக்குள். அதற்கப்புறம் அவ்வப்போது மழை பெய்கிறது தியேட்டரில். ஒரு சந்தர்பத்தில் தான் காதலிக்கும் பெண்ணே தன் தம்பியை காதலிக்கிறாள் நினைத்து கையில் கத்தியோடு என்ட்ரியாகிற நேரத்தில் ‘ஹேர்பின் பெண்ட்’ அடித்து திரும்புகிறது படம்.

ஹரீஷ்- யாமினி பாஸ்கர் காதலுக்கு நடுவே கெமிஸ்ட்ரி இருக்கிறதோ இல்லையோ? பாடல் காட்சிகளில் வழிய வழிய டெக்னாலஜி இருக்கிறது. கம்ப்யூட்டர் தொழில் நுட்ப உதவியுடன் டூயட் காட்சிகளில் டைரக்டர் காட்டியிருக்கும் இயற்கை… அப்படியொரு பேரழகு! புதுமுகம் யாமினிக்கு இன்னும் கொஞ்சம் நடிப்பு பயிற்சி அளித்திருக்கலாமோ?

காதல் மற்றும் காமெடி காட்சிகளில் வசனம் எழுதவோ, சீன் அமைக்கவோ பெரிதாக மெனக்கெடாத இயக்குனர், ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் ஆறடி உயரம் காட்டி அசர விட்டிருக்கிறார். குறிப்பாக அந்த மலையாள ஸ்லாங் போலீஸ் அதிகாரியின் கம்பீரமும், அவர் ஸ்பாட்டில் கொடுக்கும் இன்ஸ்டன்ட் தண்டனைகளும் சிறப்போ சிறப்பு.

மந்திர மூர்த்தி என்ற அரசியல்வாதி கேரக்டரில் அர்ஜுனா! கண்களில் குரூரம். கடைவாய் ஓரத்தில் கள்ளச் சிரிப்பு என்று மிரட்டியெடுக்கிறார். கோவிலில் தன்னை தாக்க வந்த எதிரிகளை அவர் போட்டு புரட்டியெடுக்கும் அந்த பைட், செம மிரட்டல்! இந்தப் படத்தில் வரும் எல்லா சண்டைக் காட்சிகளுமே ஸ்பெஷல்! பயிற்சி இயக்குனர் டேஞ்சர் மணிக்கு, இப்படம் பெரிய ஓப்பனிங் கொடுக்கும்!

கூலிப்படை இளைஞர்களும், அவர்கள் செய்யும் கொலை ஸ்டைலும் நெஞ்சை பதற விடுகிறது.

தூத்துக்குடி பாஷையை நுனி நாக்கில் சுமந்தபடி ஆக்ரோஷம் காட்டியிருக்கும் வில்லன் பாவெல், ஓவர் ஆக்டிங் செய்திருப்பது நெருடலே!

பிரபுசங்கர் என்ற புதியவரின் இசையில் எல்லா பாடல்களும் கேட்சிங் ட்யூன்! பின்னணி இசையும் பிரமாதம்.

காமெடி என்ற பெயரில் அறுத்துத் தள்ளும் காட்சிகளில் மட்டும் தயவு தாட்சண்யம் இல்லாமல் எடிட்டர் கை வைத்திருந்தால், ரசிகர்கள் சார்பில் அவரை ஆளுயர சர்பத் ஊற்றி குளிக்க விட்டிருக்கலாம். பட்…?

எளியவனை வலியவன் அடித்தால், அந்த வலியவனை எளியவன் என்ன செய்வான்? இதுதான் சடக்கென்று நம்மை பிடித்திழுக்கும் கடைசி காட்சி! யூகிக்க முடியாத இந்த காட்சியமைப்புக்காகவே, கோடம்பாக்கம் இன்னொரு முறை கதவு திறக்கலாம் அறிமுக இயக்குனர் எஸ்பிடிஏ குமாருக்கு!

முன்னோடி- அரை கம்பத்தை தாண்டாத காற்றாடி!

-ஆர்.எஸ்.அந்தணன்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter