முடிஞ்சா இவன புடி விமர்சனம்

டபுள் ஆக்ட் கதை. ஆனால் சிங்கிள் ஷாட் உதை.

கதை எவ்வளவு பழசாக இருந்தாலும், திரைக்கதையில் உப்பு மிளகாய் இஞ்சி பூண்டு எல்லாம் சேர்த்து, ‘நாக்குக்கு தோதாக கொடுப்பதில் நான்தாண்டா கில்லாடி’ என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.

100 கோடி, 200 கோடிகளை கூட அசால்ட்டாக கொள்ளையடிக்கும் ஒருவன், ‘அவன் நானில்லை’ என்று டபுள் வேஷம் போட்டு தப்பிப்பதுதான் முழு கதையும். அவனும் இவனும் ஒண்ணுதான். நம்மள நல்லா ஏமாத்துறான் என்பதை தெரிந்த பின்பும், செய்வதறியாமல் திகைக்கும் வில்லன்களும், போலீசும் தலையை பிய்த்துக் கொண்டு திரிவதை தியேட்டர் மொத்தமும் வாயில் ஈ புகுவது தெரியாமல் ரசிக்கிறது. அதற்கு ஒரே காரணம் படத்தின் ஹீரோ சுதீப்பின் தேர்ந்த நடிப்பு நடிப்பு நடிப்பு மட்டும்தான்! ஏற்கனவே நான் ஈ படத்தில் கிராபிக்ஸ் ஈ-க்கு டஃப் கொடுத்த அதே வில்லன்தான் இந்த படத்தில் ஹீரோ கம் வில்லனான சுதீப்.

ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிக் கொண்டு அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு பக்தி பரவசத்தோடு அவர் சாமி கும்பிடும் அழகை பார்த்து நித்யா மேனன் மட்டுமா ஏமாறுவார். நமக்கே சில நேரங்களில் இவரும் அவரும் வேற வேறயோ என்ற யோசனை வருகிறதேய்யா? காதலி நித்யா மேனனுடன் கோவிலுக்குப் போகும் சுதீப், அங்கு வில்லன் கும்பலிடம் சிக்கி, கெஞ்சி, கடைசியில் நித்யாமேனனின் கற்பை காப்பாற்ற தன் ஒரிஜனல் முகத்தை காட்டுகிற நேரத்தில், வருதே ஒரு சந்தோஷம்? அங்கு நிற்கிறது சுதீப்பின் கம்பீரம். (எம்.ஜி.ஆர் கால ஃபார்முலாதான். இருந்தாலும் துள்ளுதே தியேட்டர்)

கனல் கண்ணனின் பைட்டிங் ஸ்டைலை அவ்வளவு கச்சிதமாக உள்வாங்கிக் கொண்டு, மொளக் மொளக் என்று எதிராளிகளின் எலும்புகளை ஒடிக்கும் சுதீப், இப்படியே நாலு படத்தில் நடித்தால் கொட்டி வாக்கம் கோடம்பாக்கத்தில் கூட, தெருவுக்கு ஏழு ரசிகர் மன்றத்திற்கு தீனி போடுவார். சரி போகட்டும்… நித்யா மேனன் எப்படி?

கழுத்துக்கு மேலே பன் பட்டர் ஜாம்! கழுத்துக்கு கீழே, கிலோ கணக்கில் டிராபிக் ஜாம்! ஆனாலும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களில் உள்ளம் கவர்கிறார் கள்ளி!

ஏன் இப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறார் சுதீப். மறுபடியும் சோஷியல், சொசைட்டின்னு என்னத்தையாவது சொல்லி எரிச்சல் மூட்டப் போகிறார்கள் என்று நினைத்தால், அவ்வளவும் சுயநலமாம். (அட… இந்தக் காரணம் புதுசாயிருக்கே?) இந்த நேரத்தில் வரும் பிளாஷ்பேக்கும், சுதீப்பின் அப்பாவாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜின் உருக்கமான நடிப்பும், ஒரு சொட்டு கண்ணீருக்கு உத்தரவாதம். கலங்க வச்சுட்டீங்களே செல்லோம்ம்ம்ம்…

முடிஞ்சா இவன பிடின்னு தலைப்பு வச்சாச்சு. அதுக்கேற்றார் போல ஒரு சேசிங் இருக்க வேண்டாமா? மூளையை நன்றாகவே கசக்கி, அந்த இழுபறியை கடைசிவரை பரபரப்பாகவே மெயின்டெயின் பண்ணுகிறார் கே.எஸ்.ரவிகுமார். வெல்டன்.

காமெடிக்கு சதீஷ். சமயங்களில் சிரிக்க முடிகிறது. சமயங்களில் எரிச்சல். நாசரின் சிறப்பான நடிப்புக்கும், அவர் தன்னையறியாமல் சுதீப்பை காப்பாற்றுகிற ஒவ்வொரு காட்சிக்கும் விழுந்து விழுந்து கைதட்டுகிறது ரசிக மகா ஜனம்!

டி.இமானின் இசையில் பாடல்கள் அத்தனையும் சுகம். இருந்தாலும் கண்ணை மூடிக் கேட்டால், முன் ஜென்ம பாட்டுக் கூட ஞாபகத்துக்கு வருதே… புதுசா எதையாவது பண்ணுங்க இமான்.

கையால் முகத்தை மறைத்துக் கொண்டே ஓடி, பல்லாயிரம் தோட்டாக்களுக்கு நடுவில் தப்புகிற மாதிரி இதிலும் ஒரு சீன். (இப்பதான் வாகா படத்தில் பார்த்து நொந்தோம். அடுத்த நிமிஷமே இந்த படத்திலும். ஒங்க ஐடியாவுல தீயை வைக்க!)

வில்லன், ஜென்ட்டில்மேன் படங்கள் மனதில் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. பட்…. நுரைத்த சோப்பையே நுரைத்தாலும், துவைச்ச துணியையே துவைத்தாலும், ‘முடிஞ்சா என்னை புடி’ என்று வருங்கால இயக்குனர்களுக்கும் சவால் விட்டு ஓடி மெடல் வாங்கியிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார்.

 

-ஆர்.எஸ்.அந்தணன்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Another director affected by censor..
Another director affected by censor..

https://www.youtube.com/watch?v=5Jumbml1kIw&feature=youtu.be  

Close