பாகுபலியை பதற விட்ட மரகத நாணயம்! பேய் சீசன் மீண்டும் ஸ்டார்ட்!

நிழலை பார்த்தாலே மருண்டு நிற்கும் குழந்தைகள் கூட, இப்போதெல்லாம் பேய் படங்கள் என்றால் குஷாலாக தியேட்டருக்கு கிளம்பிவிடுகிறார்கள்! ‘இங்கு குறைந்த விலையில் வேப்பிலை அடிக்கப்படும். ஒரு பேயை கூட்டி வந்தால் இன்னொரு பேய்க்கு இலவச வைத்தியம்’ என்று போர்டு போடாத குறையாக தொழில் டல்லாகி கிடக்கிறார்கள் பேய் ஓட்டுகிற பூசாரிகள்.

இவ்வளவுக்கும் காரணம்… இந்த பேய்ப்பட இயக்குனர்கள்தான். “பயப்படாத… நம்ம பயதான். நாலு நாளைக்கு முன்னாடி செத்து இன்னைக்கு பேயா வந்திருக்கான். நல்லா சிரிப்பான். நல்லா சிரிப்பு மூட்டுவான்” என்று சின்ன குழந்தைகளிடமிருந்த பேய் பயத்தையெல்லாம் உடைத்து சிதைத்துவிட்டார்கள். அதிலும் சமீபத்தில் வந்த ‘மரகத நாணயம்’ படத்திற்கு நாடு முழுக்க பலத்த அப்ளாஸ். குறிப்பாக குட்டீஸ்களின் ஏரியாவில் ஒரே குதூகலம்!

இப்படி சுடுகாட்டு சாம்பலில் சுரைக்காய் புட்டு செஞ்சு அதையும் கப்புல போட்டு கனக் கச்சிதமா யாவாரம் பண்ணிய ‘மரகத நாணயம்’ படத் தயாரிப்பாளர் டில்லிபாபுவுக்கும், அப்படத்தை இயக்கிய ஏஆர்கே சரவணுக்கும் இன்டஸ்ட்ரியில் எக்கச்சக்க மரியாதை! ஏனிந்த மரியாதை? பின்னே சும்மாவா…?

ரிலீஸ் ஆன நாளிலிருந்தே தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருக்கிற பணத்தையெல்லாம் மோடி ஸ்டைலில் பிடுங்கிய படம் பாகுபலி. அதற்கப்புறம் முப்பது நாளாச்சு. நடுவில் வந்த எல்லா படத்தையும் வாரி விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது பாகுபலி. இன்னமும் அந்தப் படம்தான்ப்பா நல்லா ஓடுது. நடுவுல ஏன்தான் நீங்கள்லாம் வந்து மண்ணை கவ்வுறீங்களோ? என்று தியேட்டர் பக்கம் கேட்கிற முணுமுணுப்புக்கு செம ஆப்பு.

யெஸ்… பாகுபலியின் பந்தாவையெல்லாம் ஒரே சுருட்டாக சுருட்டிப் போட்டுவிட்டது இந்த மரகதநாணயம். அதற்காகதான் இந்தப்படத்தின் படைப்பாளிகளான டில்லிபாபுவுக்கும் ஏஆர்கே சரவணுக்கும் இவ்வளவு மரியாதை. ஒரு அறிமுக டைரக்டரான சரவணை எந்தளவுக்கு நம்பினார் டில்லிபாபு? அங்குதான் ட்விஸ்ட்.

இந்தக்கதைக்கு முன் சுமார் 63 கதைகள் கேட்டாராம் அவர். எதுவும் திருப்தியில்லை. அந்த நேரத்தில் யாரோ சொல்லி உள்ளே வந்தவர்தான் இந்த சரவன். கதை கேட்டவுடனேயே அட்வான்சை கொடுத்துவிட்டார் டில்லி. அன்று செய்த மாயம்… இன்று டில்லி வரை பேச வைத்துவிட்டார் ஏ.ஆர்.கே சரவண்.

இப்படத்தின் ஒருவார கலெக்ஷன் சுமார் ஆறு கோடியை தொடும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள். படம் ரிலீசாகி நாலாவது நாளிலேயே தியேட்டர்களை அதிகப்படுத்தக் கேட்டு ஆங்காங்கே போன்! படத்தின் இரண்டாவது வாரம் ஏற்கனவே ரிலீசான 300 தியேட்டர்களுடன் மேலும் 100 தியேட்டர்கள் சேரும் என்கிறார்கள் இப்பவே.

எல்லா புகழும் படத்தில் வரும் அந்த பொல்லா பிணங்களுக்கே! அடிங்கய்யா… தாரை தப்பட்டையெல்லாம் கிழியட்டும்….!

-ஆர்.எஸ்.அந்தணன்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Uru Review
உரு / விமர்சனம்

Close