“ புல்லுருவிகள்… ” ஆனந்த விகடனை விமர்சித்த பாடலாசிரியர் விவேகா!

நீட் தேர்வை கூட நேக்கு போக்காக எழுதி விடுவார்கள் போலிருக்கிறது. இந்த ஆனந்தவிகடன் தேர்வு வைத்து போடுகிற மார்க்கை கண்டுதான் அநியாயத்துக்கு கலங்கிப் போகிறது கோடம்பாக்கம். ஆனந்த விகடன் 50 மார்க் கொடுத்தால், ‘விகடன் பாராட்டு’ என்று தமுக்கடிக்கும் அதே சினிமாக்காரர்கள், ஒன்றிரண்டு மார்க்கை குறைத்துவிட்டால், ‘குமட்டுல குத்துவேன்’ ரேஞ்சுக்கு கோபம் ஆவதும் வாரம் தோறும் நடக்கிற வசவு நெசவு சமாச்சாரம்!

இன்னொருவகை இருக்கிறது இங்கே. மார்க்காவது…? மண்ணாங்கட்டியாவது? நாங்க எடுக்கறதுதான் படம். தைரியமிருந்தா முழுசா இரண்டு மணி நேரம் பாரு. அதுக்கே தனி தில் வேணும் என்று சவால் விடும். அத்தகைய படங்களுக்கும் கூட ‘மார்க்’ போட்டு மருவாதி பண்ணிதான் வருகிறது ஆ,வி. (ஆ ஹய்… ஆ ஹய்… புரூஸ்லீக்கு என்ன மார்க் கொடுப்பீங்களாம்?)

இந்த மார்க் விஷயத்தில் அநியாயத்துக்கு அப்செட் ஆகியிருக்கிறார் ஈரம் அறிவழகன். இவரது குற்றம் 23, ‘தாய்மை என்பது தத்தெடுப்பதிலும் இருக்கிறது’ என்று அற்புதமான கருத்தை சொன்ன படம். மாநகரம் படத்தின் கருத்தெல்லாம் ஒரு கருத்தா? ஆனால் அந்த படத்தின் மேக்கிங்கால் கவரப்பட்டு 50 மார்க் கொடுத்த ஆ.வி., குற்றம் 23க்கு குறைவான மார்க்கே கொடுத்தது.

இது குறித்து இப்படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய அறிவழகன், ஆ.வி. யின் செயல் குறித்து வருந்த… அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த பாடலாசிரியர் விவேகாக பெரும் ஆத்திரத்திற்குள்ளானார். “கவலைப்படாதீங்க அறிவழகன். சில புல்லுருவிகள் அப்படிதான். நல்ல ரிவ்யூ கொடுத்த மற்றவர்களுக்கு நாம் நன்றி சொல்வோம்” என்றார்.

அங்கு திரண்டிருந்த பத்திரிகையாளர்களில் சிலர், இந்த ‘புல்லுருவி’ விமர்சனத்திற்கு தங்கள் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்தார்கள். “எந்த பத்திரிகையையும் புல்லுருவின்னு சொல்ல நாங்க அனுமதிக்க மாட்டோம்” என்று குரல் கொடுக்க…. “எனக்கும் அந்த பத்திரிகையிடம் ஒரு தனிப்பட்ட அனுபவம் இருக்கு. அதனால் சொன்னேன். வேணும்னா அந்த புல்லுருவிங்கிற வார்த்தையை வாபஸ் வாங்கிக்குறேன். இந்த விமர்சனம் சம்பந்தமா அவங்க என் கூட தனி மேடையில் விவாதிக்க தயாரான்னு மட்டும் கேட்டு சொல்லுங்க” என்றார் கோபமாக!

குற்றம் 23 ஐ மையப்படுத்தி நடந்த இந்த சண்டைக்கு வேண்டுமானால் நூற்றுக்கு நூறு மார்க் கொடுக்கலாம்!

No Comments

Leave a Reply

Facebook

Follow Us on Twitter