பாடலாசிரியர்களின் பாட்டுதான் இப்ப பெரும் பாட்டு! இதையும் கேளுங்க மக்கா!

பாடலாசிரியர் முருகன் மந்திரம், எல்லா பாடலாசிரியர்களுக்குமாக சேர்த்து ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். சற்று வெளிப்படையாகவும் தைரியமாகவும் அமைந்த அந்த கருத்து இதோ-

இந்திய சினிமாவைப்பொறுத்த வரை ஒரு திரைப்படத்தின் பங்களிப்பில் பாடல்கள் மிக முக்கியமான இடத்தை கொண்டுள்ளன. ஆரம்ப கட்டத்தில். 40 பாடல்கள் இடம் பெற்ற படங்கள் கூட இருப்பதாக சொல்வார்கள். இன்றும் கூட பல படங்களை பார்க்கவும் அந்த படத்தின் வெற்றிக்கும் முன் வெளியீடாக வரும் பாடல்கள் மிகப்பெரிய காரணமாக அமைகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களின் நிலை பற்றி சொல்ல வருத்தமாக இருக்கிறது. கோபமாகவும் இருக்கிறது.

சமீபத்தில் மேடை போட்டு நாட்டாமை பண்ணுகிற, ஒருவர் இயக்கிய படத்தில் நண்பர் ஒரு பாடல் எழுதி இருந்தார். அவரிடம் அந்த படம் பற்றி யதார்த்தமாக பேசும்போது, அந்த படத்தில் நான் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன், ஆனால் என் பெயரை போஸ்டரில் போடவில்லை. என் பெயரை போடுங்கள் என இயக்குநரிடம் கேட்டேன். உங்கள் பெயரை போட்டால் போஸ்டரின் அழகு குறைந்து விடும் என்று சொன்னதோடு கடைசி வரை போஸ்டரில் பெயரே போடாமல் விட்டுவிட்டார்கள் என்று வருத்தப்பட்டார். இத்தனைக்கும் அவர் எழுதிய முதல் பாடலே பெரிய ஹிட் பாடல் தான்.

சமீபத்தில் நானும் இன்னும் இரண்டு பாடலாசிரியர்களும் பாடல் எழுதியுள்ள ஒரு படத்தோட போஸ்டர் வந்தது. அடடா.. நம்ம படமாச்சேன்னு போஸ்டர்ல பெயரை தேடுனா… என் பேரு மட்டுமில்ல… மற்ற பாடலாசிரியர்கள் பெயரும் இல்ல. படம் சம்பந்தமாக பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட செய்திகள், படத்தின் விக்கிபீடியா பக்கம்… எதுலயும் பாடலாசிரியர்கள் பெயர் இல்ல.

இசையமைப்பாளர்களையும் இயக்குநர்களையும் நெருங்கிய நண்பர்களாக கொண்டவர்கள் கூட சில நேரங்களில் இப்படி பாதிக்கப்படுகிறார்கள். வளர்ந்த பாடலாசிரியர்கள் பெயரை விரும்பி போஸ்டரில், செய்திகளில் போடுகிறார்கள். ஆனால், வளர்ந்து வரும் பாடலாசிரியர்கள் விரும்பி கெஞ்சி கேட்டால் கூட மறுத்துவிடுகிறார்கள். சிலர், பத்து பல்லவி, இருபது சரணம் என எழுதி வாங்குகிறார்கள். ஆனால் அதற்கு சரியாக சன்மானமும் கொடுப்பதில்லை. பெயருக்கான அங்கீகாரத்தையும் கொடுப்பதில்லை. வளர்ந்து வரும் பாடலாசிரியர்களின் சன்மானம் பற்றி கேட்டால் உங்களுக்கு மயக்கமே வரும். ரெண்டாயிரம், மூவாயிரங்களைத்தாண்டி பத்தாயிரம் தொட்டுவிட்டால் பெரிய அதிசயம் அது.

ஒரு ஹிட் பாடலின் வரிகளுக்கு சொந்தக்கார பாடலாசிரியர், டிவிக்களில் என் பாட்டு வரும்போது, வேறு ஒருவர் பெயரை போடுகிறார்கள் என்று கண் கலங்கினார்.

தொடர்ந்து பெரிய படம், பெரிய இசையமைப்பாளருக்கு பாடல் எழுதும் நண்பர் ஒருவரின் நிலை வேறு மாதிரி. பாட்டு ஹிட் தான். ஆனா, பத்து பைசா கூட இன்னும் கையில கெடைக்கல தலைவா…. என படம் வெளியாகி நான்கு மாதங்கள் கழிந்தபின்னும் புலம்புகிறார் அவர்.

ஒரு மிகப்பெரிய படத்தின் பாடலாசிரியர் அவர். ஒரு புது படத்திற்காக பாட்டு எழுதச்சொல்லி அழைத்திருக்கிறார்கள். மெட்டு கொடுத்து எழுதச்சொல்லிவிட்டார்கள். அவரும் பாடல் எழுதிக்கொடுத்து விட்டு வேறு வேலை பார்க்க போய்விட்டார். ஒருநாள் படத்தின் இசைவெளியீடு சம்பந்தமான செய்திகளை பார்த்தார். இயக்குநருக்கு போன் செய்தார். இயக்குநர் போன் அட்டெண்ட் பண்ணவில்லை. இசையமைப்பாளரும் அப்படியே. படத்தில் அவர் எழுதிய பாடல் படம் இடம்பெறவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அதற்காக அவருக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. போன் மேல போன் போட்டு பார்த்து ஓய்ந்துவிட்ட அவர், என்னிடம் சொன்னது. பாட்டெழுதி கேட்கிறப்போ… அப்டி பேசுனாங்க சார்… இப்போ படத்தில் பாட்டு இல்லைங்கிறது விஷயமில்ல. பத்து பைசா தரலேங்கிறதும் கூட ஒரு விஷயமில்லை சார். அதை எங்கிட்ட முறையாக ஒருத்தரும் சொல்லலையேங்கிறது தான் என் வருத்தம் என்றார்.

போஸ்டர், செய்திகள், விக்கிபீடியா, ஃபேஸ்புக் பக்கங்கள் எதிலும் பாடலாசிரியர்கள் பெயரை போடாமல், கொட்டை எழுத்துல “ஆடியோ வெளியீடு”ன்னு மட்டும் போடுறதைப் பார்த்தா, கடுப்பா இருக்கிறதை விட, காமெடியாகவும் வருத்தமாகவும் இருக்கு.

பெயருக்கும் பணத்துக்கும் தான் இந்த போராட்டம். சொந்த ஊர், பெத்த அப்பா, அம்மா, உறவுகள், நண்பர்கள்… எல்லாத்தையும் விட்டுட்டு சென்னைக்கு ஓடி வந்து பல வருடங்களாக போராடி ஒரு இடத்துக்கு வர பாடலாசியர்கள் மட்டுமில்ல, ஒவ்வொரு சினிமாக்காரனும் படுற கஷ்டம் ரொம்ப ரொம்ப பெரிசு. அவங்களுக்கு உங்களால முடிஞ்ச உதவியை செய்யுங்கள் நண்பர்களே. சம்பளமோ, சன்மானமோ… அதை கொஞ்சமா கொடுத்தாக்கூட பரவாயில்லை. ஆனா, மறக்காம அவங்களோட உழைப்புக்கான அங்கீகாரத்தை, அவங்களோட பெயர்களுக்கு கொடுங்க. அவ்ளோ பெரிய போஸ்டர்ல பாடலாசிரியர்கள் பெயரையும் சேர்த்து போடுறதுல ஒண்ணும் கெட்டுப்போகப் போறது இல்ல. அதோட படத்தோட செய்திகள், போஸ்டர் இந்த மாதிரி எதுலயும் பெயர் இல்லைன்னா, சில நேரங்களில்… பிரபலமான ஆடியோ இணைய தளங்களான… ITunes, Saavn, Gaana, Raaga, Hungama, இது போன்ற பிற தளங்கள் எதுலயும் பாடலாசிரியர்கள் பெயர் வராமல் போகிறது.

செய்திகள், மேடைகள், போஸ்டர்ஸ், டிரெய்லர்ல.. அவங்களுக்கான சின்ன அங்கீகாரத்தை கொடுத்தீங்கன்னா, அவங்களோட வளர்ச்சிக்கு நீங்களும் ஒரு சின்ன காரணமா இருப்பீங்க… அவங்க உங்க வளர்ச்சிக்கு ஒரு சின்ன காரணமா இருக்கிற மாதிரி. அதை விட்டுட்டு அவங்க வாயிலயும் வயித்துலயும் அடிச்சு துரோகம் பண்ணாதீங்க. இது என் அன்பான வேண்டுகோள் சினிமா நண்பர்களே.

அதே நேரத்தில் பாடலாசிரியர்களை அக்கறையோடும் அன்போடும் கவனித்து அவர்களுக்கான மரியாதையையும் அங்கீகாரத்தையும் தருகிறவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு கூறியிருக்கிறார் முருகன் மந்திரம்.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Vijaysethupathy Is Deciding Story For Me-Aishwarya rajesh.
Vijaysethupathy Is Deciding Story For Me-Aishwarya rajesh.

https://youtu.be/dEO_RlhgIW4

Close