குஷ்புவே நமஹ 9 -ஸ்டான்லி ராஜன், சதிகார கேள்விகள்! தப்பிக்கும் குஷ்பு!

திமுகவில் குஷ்பூவினை குறிவைத்து எதிர்ப்புகள் வலுத்தன, சர்ச்சைகள் அதிகமாகின.

திமுக எனும் பெரும் இயக்கத்தில் இப்படியான நிகழ்வுகள் உண்டு, பெரும் தலைவர்கள் எல்லாம் நீக்கபட்டிருக்கின்றார்கள், சிலர் தாமாக விலகியிருக்கின்றார்கள்.

குஷ்பூ திமுகவிலிருந்த நிலை, 1960களில் ஈவிகே.சம்பத் இருந்தது போல் இருந்தது, அவர் திமுகவின் ஆரம்ப கால தலைவர். திமுகவின் தூண்களில் ஒருவர். அண்ணாவும் அவரும் ஒன்றாக பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் புரிதலும் பற்றும் அதிகம். ஆனால் கட்சி நிலவரங்களையும், உட்கட்சி தகறாறுகளையும் பொறுக்காமல் வெளியேறினார் சம்பத். திமுகவில் நிகழ்ந்த முதல் உடைவு அது.

சம்பத் வெளியேறியது அண்ணாவிற்கு பெரும் வருத்தமும் துயரமும் கொடுத்த விஷயம் என்றாலும் அவருக்கும் வேறு தேர்வு இருக்கவில்லை, அண்ணாவின் கண்ணீரில் கரையேறினார் சம்பத். கிட்டதட்ட அதே காட்சிதான் பின்பு குஷ்பூ விஷயத்திலும் திமுகவில் இருந்தது. கலைஞருக்கு குஷ்பூ வெளியேறுவதில் அறவே விருப்பமில்லை. ஆனால் கட்சிமுழுக்க அவர் கட்டுபாட்டில் இல்லாமல் இருக்கும் நிலையில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை

ஜூன் 16, 2014ல் திமுகவில் இருந்து விலகினார் குஷ்பூ. இன்று திமுகவில் பெரும் தலைவியாயிருக்கவேண்டிய குஷ்பூ, தானாக விலகினார்.

இன்றும் கவனியுங்கள் திமுகவில் வலுவான பெண் தலைவர் இல்லை, கனிமொழி கலைஞரின் மகள் என்பதை தவிர பெரும் அடையாளம் ஒன்றையும் பெற்றுவிடவில்லை. குஷ்பூ திமுகவில் நீடித்திருந்தால் இன்று தனிபெரும் தலைவியாக உருவெடுத்திருப்பார் என சொல்லிதெரியவேண்டியதில்லை. அதற்கு அஞ்சித்தான் அவர் வெளியேற்றபடும்படி நிர்பந்திக்கபட்டார்.

ஒரு விஷயம் குறிப்பிட்டு சொல்லவேண்டும், வெளியேறினாரேயன்றி இன்றுவரை தான் என்ன காரணத்திற்காக வெளியேறினேன் என அவர் சொன்னதில்லை.

எத்தனையோ பத்திரிகையாளர்கள் துளைத்து கேட்டபொழுதும், அதனை சொல்வது அரசியல் நாகரீகமல்ல என மிக பெருந்தன்மையாக கடந்து சென்றார், அவர் நினைத்தால் அதனை அரசியலாக்கியிருக்கலாம், பலருக்கு பெரும் நெருக்கடி கொடுத்திருக்கலாம். பெரும் பரபரப்பினை உண்டாக்கியிருக்கலாம், ஆனால் மிக பெருந்தன்மையாக, மிக முதிர்ச்சியாக அதனை கையாண்டார் குஷ்பூ

திமுகவில் இருந்து வெளியேறியபின் அவருக்கு பல கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தன. வைரத்தை தன் மகுடத்தில் பதித்துகொள்ள எல்லா கட்சிகளுமே விரும்பின‌

அப்பொழுது ராகுல்காந்தி காங்கிரசை வலுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தார். தமிழக காங்கிரசை வலுபடுத்த அவர் எண்ணியபொழுது குஷ்பூ பெயர் பரிந்துரைக்கபட்டது.

தமிழகத்தில் அவரின் பிரபலம் பற்றி அறிந்த டெல்லி தலமையும் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்றது, 26 நவம்பர் 2014ல் காங்கிரசில் இணைந்தார் குஷ்பூ.

ஆச்சரியமாக எந்த சம்பத் திமுகவிலிருந்து கண்ணீரோடு வெளியேறினாரோ, அந்த சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் சம்பத் போலவே வெளிவர மனம் இல்லாமல் வந்து காங்கிரசில் இணைந்தார் குஷ்பூ.

அவர் இணைந்த மகிழ்ச்சியில் அவரை தமிழகத்தில் முடக்க அது விரும்பவில்லை, பல மொழிகள் தெரிந்தவர் என்பதாலும், மிக சிறந்த ஆங்கில பேச்சாற்றல் உள்ளவர் என்பதாலும் அவருக்கு மிகபெரிய பொறுப்பு வழங்கபட்டது. காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் ஆனார் குஷ்பூ, மிக குறுகிய காலத்திலே அப்பதவிக்கு உயர்த்தபட்டார்.

அகில இந்திய செய்திதொடர்பாளர் எனும் பதவியில் அவர் சில கேள்விகளுக்கு பதிலளித்தே ஆகவேண்டியிருந்தது, அதில் ஒன்று விடுதலைப்புலிகள் தொடர்பானது.

அதற்கு ஏன் தடை என ஒன்றும் தெரியாதது போல நிருபர்கள் கேட்டார்கள், புலிகளுக்கு இந்தியாவில் ஏன் தடை என யாருக்கும் தெரியாதா என்ன? குஷ்பூ அவருக்கே உரித்தான தைரியத்தில் சொன்னார், ஆம், அது தீவிரவாத இயக்கம் அதனால் காங்கிரஸ் புலிகளை ஆதரிக்காது

அவ்வளவுதான் இதுதான் வாய்ப்பு என தமிழ் உணர்வாளர்கள் பொங்கிவிட்டனர், அவர்களுக்கு தெரிந்த ஒரே தமிழுணர்வு புலிகளை ஆதரிப்பது மட்டும் என்ற கொள்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்

குஷ்பூ மீது மிக சரமாரி கண்டனங்களை தெரிவித்தார்கள், அதே கலாட்டா, கல்வீச்சு, அவர் வீட்டுமுன் ஆர்ப்பாட்டம் இன்னபிற ஜனநாயக முறை எதிர்ப்பு.

புலிகள் தீவிரவாத இயக்கம் என யார் சொல்லவில்லை?

டெல்லி கோர்ட் சொன்னது, லண்டன் சொன்னது , கனடா சொன்னது, அமெரிக்காவே அப்படி சொல்லி புலிகளுக்கு தடைவிதித்திருந்தது .

ஆக உலகமே சொன்ன ஒரு விஷயத்தைத்தான் குஷ்பூவும் சொல்லியிருந்தார், அதற்குத்தான் அந்த ஒப்பாரி. ஏன் என்றால் அவர்கள் அப்படித்தான், குஷ்பூ போன்ற பெரும் பிரபலம் புலிகளை கண்டித்துவிட்டால் மக்களிடம் மிக எளிதாக சென்றுவிடும் எனும் அச்சம்

கலாச்சார காவலர்கள், கட்சிக்காரர், தமிழ் உணர்வாளர் என எல்லோரும் குஷ்பூ மீது குறிவைத்து நிற்பது இதனால்தான். ஆனால் இதனை எல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் தன் வழியில் கட்சிபணியினை செய்துகொண்டே இருந்தார் குஷ்பூ

அகில இந்திய பிரச்சினைகளிலும் மிக துணிவாக கருத்து சொல்லிகொண்டிருந்தார், டெல்லி பல்கலைகழக பிரச்சினைகளில் அவரின் குரல் அகில இந்திய அளவில் எதிரொலித்தது, ஆங்கிலத்திலும், இந்தியிலும் அவர் பேசி மீடியாக்களில் வந்த பேட்டிகள் அகில இந்திய அளவில் கவனிக்கபட்டன.

இப்படியாக அகில இந்திய அளவில் பிரபல அரசியல்வாதியானார் குஷ்பூ.

பின் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அவரின் பிரச்சாரம் மிக சிறப்பாக இருந்தது, காங்கிரஸ் கூட்டணி பெரும் வாக்கினை கைபற்றி இன்று பெரும் எதிர்கட்சியாக நிற்க அவரின் பிரச்சாரமும் ஒரு காரணம்.

அந்த தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பும் இருந்தது, ஆனால் பின்னாளில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிஅமைத்தால் குஷ்பூ மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதால் சட்டமன்ற தேர்தலில் அவர் நிற்கவில்லை.

பொறுத்து பாருங்கள், பின்னாளைய‌ காங்கிரஸ் ஆட்சியில் அவர் நிச்சயம் அமைச்சராகத்தான் போகின்றார். பாஜகவின் சுஷ்மா போல பெரும் உலக அடையாளம் பெறத்தான் போகின்றார்

காங்கிரசில் பெரும் இடம் வகிக்கும் குஷ்பூவிடம் சில சிக்கலான கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் அது பெரும் செய்தியாகும் என பத்திரிகைகள் சிந்தித்தன‌

பெரும் எதிர்ப்புகளை எல்லாம் கண்ட குஷ்பூ, இப்பொழுதெல்லாம் கேள்விகளை மிக கவனமாக கையாள்கிறார். அப்படித்தான் அந்த கேள்வியினையும் கேட்டார்கள்

(பூ பூக்கும்)

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Surya fans insult to Thtamizhisai
தமிழிசையிடம் சூர்யா மன்னிப்பு!

கைதட்டுவதற்கு மட்டுமல்ல ரசிகர்கள். கர்ணகொடூரமாக திட்டித் தீர்க்கவும்தான் என்பதை அண்மைக்காலம் அழுத்தம் திருத்தமாக உணர்த்தி வருகிறது. அதுவும் சோஷியல் மீடியா வந்தபின், ஆளாளுக்கு வாயில் கூவத்தை குடித்து...

Close