கோடிட்ட இடங்களை நிரப்புக – விமர்சனம்

வைக்கோல் போரில் தீப்பெட்டியை ஒளித்து வைத்தவன், எந்த நேரத்திலும் பற்றும் என்று காத்திருப்பானல்லவா? அப்படி காத்திருக்க வைக்கிறார் பார்த்திபன். சடங்கு நடந்ததா? சந்தனக்கிண்ணம் உடைந்ததா? என்பதுதான் படத்தின் முக்கால்வாசி மேட்டர். மீதியில் ஒரு சின்ன ட்விஸ்ட்! பார்த்திபனின் திரைக்கதை ஓவர்.

வழக்கமாக கோடு போட்டு அதில் ரோடு போடும் பார்த்திபன், இந்த படத்தில் ரோடு போட்டு ஒரு சின்னக் கோடு போட்டிருக்கிறார். ஹெட் மாஸ்ட்டர் பியூன் ஆகிட்டாரே என்கிற வருத்தம் நமக்கு இல்லாமல் இல்லை.

படத்தின் கதை இதுதான்.

அமெரிக்காவிலிருந்து ஒரு புராஜக்ட் விஷயமாக சென்னைக்கு வரும் சாந்தனுவை, அவருக்காக கார் ஓட்டும் கால் டாக்சி டிரைவரான பார்த்திபன் ஒரு பங்களாவில் குடி வைக்கிறார். ஓட்டலில் தங்குவதைவிட இதுபோன்ற பிரைவேட் பங்களாக்களில் தங்குவதை விரும்புகிறவர்தான் சாந்தனு. அங்கு வீட்டு வேலை செய்யும் பார்வதி நாயரை, பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்கிறார் சாந்தனு. ஆனால் அவர்தான் பார்த்திபனின் மனைவி என்பது தெரியவர… துள்ளிய பூனையை பானைக்குள்ளேயே போட்டு அடக்கிவிட்டு சொந்தவேலையில் மூழ்கினால்? பூனையே வந்து ‘பூசிக்கோ என்னை’ என்கிறது. இடைவேளைக்கு பின்பு இருபது நிமிஷம் வரைக்கும் பூச்சாண்டி காட்டிதான் மேற்படி சடங்கை முடித்து வைக்கிறார் டைரக்டர் பார்த்திபன்.

அதற்கப்புறம் குற்றவுணர்ச்சியில் தவிக்கும் சாந்தனு கைநிறைய கரன்ஸியை அள்ளி பார்த்திபனிடம் கொடுத்துவிட்டு ஊர் திரும்புகிறார். பிறகு இங்கே என்ன நடக்கிறது? ட்விட்ஸ்ட்… (நீங்க அதி மங்கிய அசமஞ்சமாக இருந்தால்தான் க்ளைமாக்சை முன் கூட்டியே யூகிக்காமலிருப்பீர்கள். மற்றபடி, முதல் ரீலிலேயே இதுதான்டா கடைசி காட்சி என்று நம்புகிற அளவுக்குதான் பெப்பரப்பே சமாச்சாரமாக இருக்கிறது கதையின் போக்கு)

மிக மிக இயல்பாக நடித்திருக்கிறார் சாந்தனு. “சிரிச்சு பேசுனா நான் இப்படிதான்னு நினைச்சுப்பீங்களா?” என்று பார்வதி நாயர் எகிறிய பின்னால் குற்றவுணர்ச்சியோடு ஒதுங்குகிற இடத்தில், சைலன்ட்டாக ஸ்கோர் பண்ணுகிறார் சாந்தனு. ஒரு பண்பான பணக்காரன், எப்படியெல்லாம் நடந்து கொள்வானோ, அப்படியொரு முதிர்ச்சியை அற்புதமாக வடிக்கிறது அவரது முகம். பட் ஒன் திங். இனி வரும் படங்களும் இதுபோல ‘மவுஸ்’ பிடிக்கிற ‘திருட்டு கேட்’ சமாச்சாரமாக இருந்தால், ‘கேட்’ ஏறியாவது ஓடிவிடுவது எதிர்காலத்திற்கு நல்லது!

பார்வதி நாயரை படம் முழுக்க வர்ணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவரோ முந்தாநாள் அரிந்து வைத்த முள்ளங்கி பத்தை மாதிரி வெம்பிப் சூம்பிப் போயிருக்கிறார். கழுத்துக்கு கீழே நடித்தால் போதும் என்று கணக்குப் போட்டிருப்பார்கள் போலிருக்கிறது. ‘உங்க எண்ணத்துல ஹை பவர் கண்ணாடி விழ….! ’

படத்தில் சிம்ரன் இருக்கிறார். ஒரு நாள் கால்ஷீட் வாங்கி, அதையும் அரைநாளில் முடித்து அனுப்பி வைத்திருப்பார்கள் போல…

மறதி நோயால் அவதிப்படும் சக டிரைவராக தம்பி ராமய்யா. லேசாக சிரிக்க வைக்கிறார். அவரது வரையப்பட்ட மண்டை ஐடியாவுக்கு மட்டும் ஒரு மனம் நிறைந்த கைதட்டல்!

சற்றே கால்கள் தாங்கி தாங்கி நடக்கிற பார்த்திபனின் நடிப்பில் துளி ஸ்கிராட்ச் கூட இல்லை. அற்புமாக நடித்திருக்கிறார். அவ்வப்போது அவர் வாயிலிருந்து வெளிப்படும் டபுள் மற்றும் சிங்கிள் மீனிங் டயலாக்குகள், ஜெயித்தே ஆக வேண்டும். அது எந்த விதத்தில் அமைந்தாலும் சரி என்கிற ‘கொள்ளை’ மனப்பான்மையை காட்டுவதால் கொள்ளாத வருத்தமே மிஞ்சுகிறது. (பார்த்திபனின் முன்னாள் பேட்டியை அவருக்கே நினைவுபடுத்த வேண்டிய தருணம் இது. “இனிமே என் வாழ்நாளில் ‘உள்ளே வெளியே’ மாதிரி ஒரு படத்தை எடுக்க மாட்டேன். அதுக்காக இப்போ வெட்கப்படுகிறேன்” என்பதுதான் அந்த பேட்டியில் பார்த்திபனின் பதில். இதுவும் டபுள் மீனிங் விஷயத்தில் ஒரு உள்ளே வெளியேதான்.)

சாந்தனுவின் எண்ண ஓட்டத்தில் மலரும் காட்சிகளுக்கும், நிஜத்திற்கும் சட்டென முடிச்சுப் போடுகிற அந்த எடிட்டிங் ஸ்டைல் ஆஹா! கவனிக்க வைக்கிறார் எடிட்டர் ஆர்.சுதர்ஷன்.

சத்யாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம். மெலடியில் கவரும் சத்யா, குத்துப்பாடலில் குதிக்கவே விடுகிறார்.

கோடிட்ட இடத்திலெல்லாம் எதையாவது நிரப்பிக்கொள்ள எத்தனையோ டைரக்டர்கள் இருக்கிறார்கள். பார்த்திபனின் தகுதிக்கும் திறமைக்கும் நிரப்ப வேண்டியது இது அல்ல! வேற…

-ஆர்.எஸ்.அந்தணன்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
“I DID’NT DO MISTAKE BUT I AM DEPRESSED”-Trisha Emotional Statement.
“I DID’NT DO MISTAKE BUT I AM DEPRESSED”-Trisha Emotional Statement.

https://youtu.be/iglIUj4fb8w

Close