கடவுள் இருக்கான் குமாரு / விமர்சனம்

1

ஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’! நடுநடுவே ‘‘கடவுள்னு ஒருத்தன் இருக்கானாடா குமாரு?’’ என்று தியேட்டரை புலம்ப வைத்தாலும், றெக்கையே இல்லாமல் ஃபேன் ஓட்டிய திறமைக்காக படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்முக்கு, அகில உலக விஞ்ஞானி விருது ரெடி!

கதை என்கிற அழுத்தமான பில்லருக்காக எவ்வித சிரமமும் படவில்லை அவர். முகலிவாக்கம் பில்டிங்கை விட மோசமான அஸ்திவாரத்தின் மீது, கல்பாக்கம் அணு உலையை கட்டிய மாதிரி, காலியான கதைக்குள் ஜாலியான ஜோக்ஸ்களை அள்ளிப் போட்டு, தியேட்டரை எங்கேஜ் பண்ணியிருக்கிறார் ராஜேஷ். இனி ஜிவிபிரகாஷுக்கு கதை சொல்லக் கிளம்பும் கூட்டத்தில் ஜோக்ஸ் எழுத்தாளர்களும் இருந்தால், அது குமாரு தந்த கொலாப்ஸ் அன்றி வேறில்லை!

கிறிஸ்துவ பெண்ணான ஆனந்தியை காதலிக்கும் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி அப்பாவின் மதம் மாற்றும் நோக்கம் பிடிக்காமல் அவரிடமிருந்து விலக, சுட சுட இன்னொரு பெண் ரெடி. நிக்கி கல்ராணிக்கும் இவருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகிற நாளில், பொக்கே வருகிறது ஆனந்தியிடமிருந்து. பழங்கால காதலை தெரிந்து கொண்ட வருங்கால மனைவி நிக்கி, ஜி.வி. பிரகாஷை சந்தேகப்பட… எப்படியோ கெஞ்சி கூத்தாடி பாண்டிச்சேரிக்கு பேச்சுலர் பார்ட்டிக்கு கிளம்புகிறார் ஜி.வி. கூடவே நண்பன் ஆர்.ஜே.பாலாஜியும் இணைந்து கொள்ள, பயணம் என்னாச்சு. போலீசிடம் சிக்கிக் கொண்ட ஜி.வி. எப்படி நிக்கியை விட்டுவிட்டு மீண்டும் ஆனந்திக்குள் ஐக்கியமானார் என்பது முடிவு.

‘நான் ஒரு பட்டன்தான் போடல. நீ ஒரு பட்டனும் போடல…’ என்பது மாதிரியான குபீர் சிரிப்பு வசனங்கள் மட்டுமல்ல, ஹாரிஸ் ஜெயராஜில் ஆரம்பித்து, தனுஷ் சிம்பு வரைக்கும் போட்டு பிளக்கும் வசனங்களால், தன் போன் நம்பரை கூட மேற்படி சினிமாக்காரர்கள் எரிச்சல் பட்டு அழிக்கிற அளவுக்கு அழிச்சாட்டியம் பண்ணியிருக்கிறார் ராஜேஷ் எம். ஆனால் அந்த மீம்ஸ்களை புரிந்து கொண்டு ரணகளமாக சிரிக்கிறது தியேட்டர். அதிலும் ஆர்.ஜே.பாலாஜியின் நக்கலுக்கும் நையாண்டிக்கும் படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா கூட தப்பவில்லை என்றால் பாருங்களேன். கிறிஸ்துவ மத வெறியர்களை, இதற்கு முன் பாலாதான் படுத்தி வைத்தார். அவரை மிஞ்சிவிட்டார் ராஜேஷ். சர்ச்சுக்கு சர்ச், சர்ச்சை வெடித்தால், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

சரி… ஜி.வி.பிரகாஷ் என்ன பண்ணியிருக்கிறார்? முதல் படத்தில் பார்த்த அதே மெச்சூரிடிதான் மூன்றாவது நான்காவது படத்திலும் என்கிற போதுதான், ‘ஐயே’ என்கிறான் ரசிகன். (அந்த ‘வெர்ஜின் பாய்’ டயலாக்கை இனிமேலாவது விட்ருங்க ப்ரோ.) ஆனால் அலப்பறை கொடுப்பதில் மனுஷன் சீனிப்பட்டாசாக பொறிகிறார். அதுவும் சர்ச்சுக்கு போய் அப்பம் தின்ன ஆசைப்படுவதும், பாதருக்கு பதில் சொல்கிற போது அவரையே குழப்பியடிப்பதுமாக அடங்காத அராத்தாக திரிகிறார். ஊர் என்ன வேணா சொல்லட்டும்… நானும் என் படமும் இப்படிதான் என்கிற அவரது கொள்கை முடிவு, சரியா தப்பா என்பதற்கு காலம்தான் மார்க் போட வேண்டும்.

மாநிற ஆனந்தியை அதே மாநிறத்தோடு நடமாட விட்டால்தான் என்ன தப்பு? பேர் அண் லவ்லி பொம்மை போல வருவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் ரசிக்கிறது மனசு. என்னதான் இருந்தாலும், தாவணி ஆனந்தியின் முன், ஜீன்ஸ் ஆனந்தி டம்மிதான். டபுள் ஹீரோயின் கதையில், சிங்கிள் கான்பிடன்ட்டோடு நிற்கும் அவரது நம்பிக்கையை பொய்யாக்கவில்லை ராஜேஷும், ஜி.வி.யும்.

நிக்கி கல்ராணிக்கு அதிகம் வேலையில்லை. டேய் எங்கடா இருக்க? எப்படா வருவே? என்று போனிலேயே பேச விட்டு கதையை முடித்துவிட்டார்கள். இருந்தாலும் நிக்கி கல்ராணியின் சேவை, ஜி.வி.க்காக தொடரட்டும். பொறுத்தமான ஜோடியாச்சே?

படம் முழுக்க லொட லொடவென்று பேசினாலும், கடகடவென்று ஒப்பிக்கிற அளவுக்கு உள்வாங்குகிற ஜோக்ஸ்கள்தான் ஆர்.ஜே.பாலாஜியினுடையது. நண்பன் கேரக்டர்தான். ஆனால் நீக்கமற நிறைந்திருக்கிறார் இவர். படத்தின் கலகலப்புக்கு இவரே 90 சதவீத உத்தரவாதம் என்பதால், இருந்திட்டு போங்க ராசா!

அந்த ஊர்வசி எபிசோடில், யோசிக்காமல் கால் மணி நேரத்தை வெட்டி விளாசியிருக்கலாம். இவ்வளவு பலமில்லாத கதையில் இதற்கு முன் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாரா பிரகாஷ்ராஜ்? இல்லையென்றே தோன்றுகிறது. ஆனால், வில்லனோ, காமெடியனோ… தன்னை தவிர கூட இருப்பவர்கள் பக்கம் கூட பார்வையை திருப்ப முடியாதளவுக்கு கட்டிப் போடுகிற வித்தை இருக்கிறது அவரிடம். ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம்புலி என்று அவரவருக்கு கொடுத்த வாய்ப்பை அசத்தலாக செய்து கொடுத்திருக்கிறார்கள்.

பேக்கேஜ் சம்பளம் போலிருக்கிறது. நடிப்பும் இசையும் ஜி.வி.பிரகாஷ்தான். இசைக்கான சம்பளத்திலிருந்து சில லகரங்களை நடிப்புக் கணக்கில் போட்டுவிட்டார். நடிப்பிலிருக்கிற தூக்கல், இசையில் இல்லீங்களே பிரதர்.

படத்தில் பெரிய அப்பத்தை எதிர்பார்த்து சர்ச்சுக்கு போவார் ஜி.வி.பிரகாஷ். உள்ளே கிடைப்பதென்னவோ உள்ளங்கை சைசுக்கும் சின்னது. படம் முடியும் போது அந்த அப்பத்தின் ‘சைஸ்’தான் மனதுக்குள் வந்துவிட்டு போகிறது.

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Unmai says

    Inthu Mokka Padam

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Kadhal Kanavu – Official Music Video
Kadhal Kanavu – Official Music Video

https://www.youtube.com/watch?v=epFAHouty8I

Close