கபாலி – விமர்சனம்

தேங்கிய மழை நீரில் திமிங்கலம் ஒதுங்கிய மாதிரி, இந்தப்படத்தில் ஒதுங்கியிருக்கிறார் ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினி!!

துபாயில் துப்பட்டா வித்தா நமக்கென்ன? பல்கேரியாவில் பாயாசம் கொதிச்சா நமக்கென்ன? தென் கொரியாவில் தேங்காய் ஒடைஞ்சா நமக்கென்ன? என்கிற மனநிலை படம் பார்க்கிற பத்தாவது நிமிஷத்தில் நமக்கு வந்துவிடுகிறது. காரணம்… மலேசியா தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், மலாய் முதலாளிகளுக்கும் இடையே நடக்கிற கூலி மற்றும் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்துதான் கதை.

தமிழனுக்கு சம்பள உயர்வு பெற்றுத்தரும் ரஜினியை, அங்கிருக்கும் தமிழர் தலைவரான நாசர் உசுப்பேற்றிவிடுகிறார். கொஞ்ச நாளிலேயே தலைவர் நாசருக்கு உடன் இருப்பவர்களே கொள்ளி வைக்க, நாசரின் காலியான இடத்தில் உட்காருகிறார் ரஜினி. ஆங்… அந்த ஓப்பனிங் சீன் பிரம்மாதம். சிறைக்குள்ளிருந்து 20 வருஷங்கள் கழித்து வெளியே வரும் ரஜினி, மாறிப்போன மலேசியாவை பிரமிப்போடு பார்க்கிற காட்சி. அந்த வெண்தாடியும், அந்த தாடிக்குள்ளிருந்து அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்களும், அந்த அலட்சிய சிரிப்பும், எவ்வளவு பாடாவதி கதையையும் இட்டு நிரப்புகிற பேரழகு!

நிறைமாத கர்ப்பிணியாய் தன் மனைவி ராதிகா ஆப்தேவை பறிகொடுத்துவிட்டு சிறைக்குப் போகும் ரஜினி, அவள் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறாள் என்று தெரிந்தால் என்னாவார்? ஆகிறார்…! உயிரோடு இருக்கிற மகளையும் கூட்டிக் கொண்டு ராதிகாவை தேடிச் செல்லும் அவர், தொலைந்தவை கிடைத்த பின்பும், கிடைத்ததை கொண்டு சுகமாய் இருக்க முடிகிறதா? கவித்துவமான முடிவு. ஆனால் கலங்கலான பிரசன்ட்டேஷனுடன்! “ஏம்ப்பா… அவன் ரஜினியை சுட்ருப்பான்ற?” “இல்லப்பா… அவனைதான் அவரு சுட்ருப்பாரு…” இப்படி முணுமுணுப்போடு கலைகிறது ரசிகர் கூட்டம்!

இதே ரஜினி படத்தில்தான் ஒரு நீலாம்பரி அழியாப்புகழ் பெற்றார். இதே ரஜினி படத்தில்தான் ஒரு ஆன்ட்டனிக்கு அழியாப் புகழ் கிடைத்தது. இப்படி இதே ரஜினி படத்தில்தான்… என்று உதாரணம் காட்டிக் கொண்டேயிருக்க முடியும். இந்தப்படத்தில், ரஜினி என்கிற ஒரு நபர் ராணுவம் போதும் என்று நினைத்துவிட்டார் பா.ரஞ்சித். அவரைத்தவிர, ரஜினிக்கு டஃப் கொடுக்கிற ஒரு லுச்சா பச்சாவும் இல்லை என்பதுதான் இந்த படத்தின் ஆகப்பெரிய ஆழ்துளை பஞ்சர்!

நல்லவேளை… படம் முழுக்க வருகிறார் ரஜினி. நின்றால், நடந்தால், சிரித்தால், முறைத்தால், ஏன் மூச்சு விட்டால் கூட அவரை முழுசாக ரசிக்க முடிகிறது. அதிலும் படத்தில் வருகிற அந்த முதல் பைட், இத்தனை வயதில் இப்படியொரு கரண்ட்டா? என்று பிரமிக்க வைக்கிறார் ரஜினி.

‘நாயகன்’ படத்தில் ஒரு நாயக்கரே… என்றால், இந்தப் படத்தில் ஒரு ஜான் விஜய். ரஜினி ஊரிலில்லாத போது அவரையும் போட்டுத்தள்ளுகிறார்கள். முகமெல்லாம் பேண்டேஜ் கட்டுகள் சகிதம் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன், அவருக்குள்ளிருக்கும் நடிகனையும் வெளிப்படுத்துகிறது. படத்தில் கலையரசன், தினேஷ், ரித்விகா, மைம் கோபி என்று பல ‘தெரிந்த’ முகங்கள். (நமக்கில்லைப்பா. பா.ரஞ்சித்துக்கு) கலையரசனுக்கு ஸ்கோர் இல்லாவிட்டாலும், தினேஷுக்கு நிறைய மார்க் கொடுக்கலாம். அதுவும் அவரை போட்டு நையப்புடைக்கிற அந்த பைட் சீனில், மனுஷன் அற்புதமாக நடித்திருக்கிறார்.

கபாலி மட்டும் வரட்டும். தன்ஷிகாதான் பேசப்படுவார் என்று பில்டப் கொடுத்தவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவரும் பேசவில்லை. அவர் கேரக்டரும் பேசப்படவில்லை.

ராதிகா ஆப்தே கேரக்டருக்கு நம்ம ஊரு தேவயானி போதும். எதற்காக அவ்வளவு பெரிய பில்? இருந்தாலும், ரஜினியும் ராதிகாவும் சந்தித்துக் கொள்கிற அந்த காட்சி, நம்மையறியாமல் மனமுருக வைக்கிறது. திரிசூலத்தில் பல வருஷங்கள் கழித்து சிவாஜியும், கே.ஆர்.விஜயாவும் போனில் பேசிக் கொள்வார்களே… அப்படி! “உன் கருப்புக் கலரை அப்படியே எடுத்து என் உடம்பு முழுக்க பூசிக்கணும்” என்கிற வசனம் பேசும்போது மட்டும் ராதிகாவின் கண்ணும், அதற்குள் ஒளிந்திருக்கிற வெட்கமும் அழகோ அழகு.

கேங் லீடராக வரும் கிஷோருக்கு பெரிய வேலையில்லை. ஆனால் ரஜினியுடன் முதல் பைட்டில் மோதும் அந்த இளைஞர் கவனிக்க வைக்கிறார்.

பின்னணி இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பாடல்களில் ‘நெருப்புடா’ மட்டும் உயிர். ஜீவன். எல்லாம்! மற்றவை ‘வெறுப்புடா!’ ஜி.முரளியின் ஒளிப்பதிவு பிரமாதம். பிளாஷ்பேக்கில் வரும் இளைஞர் ரஜினிக்கு இவர் கொடுத்திருக்கும் டோன் மற்றும் லைட்டுங்குகள் அபாரம்.

‘வசனங்கள் மிக இயல்பாக எழுதப்பட்டுள்ளன’ என்று பாராட்டலாம். அதே நேரத்தில் ‘அவசரத்துல எழுதியிருப்பாங்க போலிருக்கு. அதான் ஒரு தனித்துவம் இல்லாம போச்சு’ என்றும் குறை சொல்லலாம். “நாங்க கோட்டு சூட்டு போட்டா உங்களுக்கு அது ஏண்டா உறுத்தலா இருக்கு?” என்கிற வரிகளில் மட்டும், பெட்ரோல் வாசனை! மற்ற எந்த இடங்களிலும் அது போன்ற நெருப்பு வாசனை இல்லாதது பெரும் குறை.

ரஜினியின் வழக்கமான படமாக இது இருந்துவிடக் கூடாது என்பதில் பெரும் முனைப்பு காட்டியிருக்கிறார் பா.ரஞ்சித். அவரது அறிமுக காட்சியில் ஒரு கொண்டாட்ட பாடல் இல்லை. ஹாஸ்யங்களுக்கு வழி இருந்தும், அந்த கதவுகளையெல்லாம் மெனக்கெட்டு அடைத்திருக்கிறார் டைரக்டர். இந்த ரஜினி படம், பலத்த பாடுபட்டு ரஞ்சித் படமாக்கப்பட்டுள்ளது என்பதற்கு சில உதாரணங்கள் இவை.

ரஜினி என்ற ஸ்டார் ஓட்டலையே சொத்தாக எழுதி வைத்துவிட்டார் தயாரிப்பாளர் தாணு. அப்படியிருந்தும், பசிக்கு கையேந்தி பவன் பக்கம் ஒதுங்கியிருக்கிறார் பா.ரஞ்சித்.

ஃபேட் என்பதா, டேஸ்ட் என்பதா?

-ஆர்.எஸ்.அந்தணன்

11 Comments

 1. Ramkumar says:

  Hahah..good comedy review :-) dont know whether u watched or heard story alone from someone :-) we could understand ur intensions..

 2. Thanusan says:

  Did you watch the movie?

  @Readers:. Think as direct opposite to what is written. Ex. Dhanshika’s performance is next to Rajini. BGM is worst.

  Not worth for even 120. rajini fans may be like it but linga is better than this.

 3. roja says:

  “ரஜினி” என்ற மந்திரத்தை பயன்படுத்த தெரியாத ரஞ்சித்யும், மிக தவறாக பயன்படுத்திய தாணுவும் – கபாலி
  நெருப்புடா… வெறுப்புடா… கடுப்புடா

 4. Ghazali says:

  Unbiased review. Ranjith wasted mass.

 5. selva says:

  Film super
  Neenga ajith ku jalra poduravanga

 6. SUPER STAR RAJINI IN & AS KABAALI MAAS & CLASS HIT.
  2016- ONLY BLOCKBUSTER MOVIE – ONE & ONLY KABAALI.

 7. பிசாசு குட்டி says:

  சாமியை சுமந்து செல்லும் யானையை பிச்சை எடுக்க வைத்திருக்கிறார். ரொம்ப தொல்லை (கபாலியில் அப்படி யில்லை) கொடுக்கும் வில்லனை சில சமயம் பசங்க யோசிக்கிறமாதிரி கடைசி காட்சி டுபுக் டுபுக் டுபுக் என்று சுட்டு கிளைமாக்சை முடிக்கிறார்.

 8. Raja says:

  வசூலில் பின்னும் கபாலி

  உலகமெங்கும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் ‘கபாலி’ ரிலீஸானது. தமிழகத்தில் திரையிட்ட முதல் நாளிலேயே சுமார் 21.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ்த் திரையுலகில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் முதல் நாள் வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது. உலகளவில் கபாலியின் முதல் நாள் வசூல் 100 கோடி இருக்கும் என்றும் ஆச்சர்யமாக கூறப்படுகிறது.

 9. பிசாசு குட்டி says:

  ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் வசூலில் தினமும் ஒரு சாதனைப் படைத்து வருகிறது. இந்தப் படம் வெளியான ஆறாவது நாளில் ரூ 323 கோடியைத் தாண்டியுள்ளது.

  இந்த வார இறுதி நாட்களிலும் பெரும்பாலான அரங்குகளில் காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகியுள்ளதால், ரூ 400 கோடிகளை எளிதாகத் தாண்டிவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  ரூ 400 கோடியைத் தாண்டினால், கபாலிதான் ரஜினியின் திரையுலக வாழ்க்கையிலேயே அதிக தொகையை வசூலித்த திரைப்படம்.

  கபாலியின் வெளிநாட்டு வசூல்தான் அத்தனை இந்திய சினிமாக்காரர்களையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்திருக்கிறது. இந்தப் படத்தின் உரிமையை ரூ 8.5 கோடிக்கு வாங்கியிருந்தனர் அமெரிக்க விநியோகஸ்தர்கள். இந்தத் தொகையை முதல் நாளே தாண்டிவிட்டது கபாலி. முதல் மூன்று நாட்களில் மட்டுமே ரூ 28 கோடியைக் குவித்து விநியோகஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
  படம் வெளியான ஆறாவது நாள் வரை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 138 கோடியைக் குவித்துள்ளது கபாலி. இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ 170 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்த வசூல் கணக்கு சாதாரண டிக்கெட் கட்டண அடிப்படையில்தான் கணக்கிடப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் சத்யம் சினிமாஸ் அரங்குகள், மாயாஜால் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர மற்ற அனைத்து அரங்குகளிலுமே முதல் மூன்று நாள் காட்சிகளுக்கு டிக்கெட் ஒன்று சராசரியாக ரூ 1000 வரை விற்பனையானது. இந்தத் தொகையின் அடிப்படையில் வசூலைக் கணக்கிட்டால் அது எங்கேயோ போகும் என்கிறார்கள் கபாலி வியாபாரத்தை கூர்ந்து கவனித்து வருபவர்கள்.

  கபாலி படத்துக்கான இரண்டாவது வார டிக்கெட்டுகளும் படுவேகமாக விற்பனையாகி வருகின்றன. நாளை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்கான டிக்கெட்டுகள் நகர்ப்புற அரங்குகளில் 90 சதவீதம் விற்பனையாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

 10. Roja says:

  கபாலி படம் பல கோடி வசூல் செய்தது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் இதுவரை வேறு எந்த தமிழ் படங்களும் செய்யாத அளவிற்கு வசூல் சாதனை செய்துள்ளது.

  முதல் 3 நாட்களிலேயே ரூ 50 கோடி வரை வசூல் செய்த கபாலி, தற்போது வரை ரூ 75 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துவிட்டதாம்.

  இந்த படத்தின் லாபத்தில் 75% தயாரிப்பாளருக்கும், 25% திரையரங்க உரிமையாளர்களுக்கு என்றபடி தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

  இதன்படி ரூ 50 கோடி வரை தயாரிப்பாளருக்கு போக ரூ 25 கோடி திரையரங்க உரிமையாளர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது, இதுவரை வேறு எந்த படங்களும் 10 நாட்களில் இவ்வளவு வசூல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 11. பிசாசு குட்டி says:

  KABALI – THE MASS & CLASS MOVIE.
  SUPER STAR RAJINI IS A COLLECTION KING OF INDIAN CINEMA
  ONE & ONLY BLOCKBUSTER MOVIE OF THE YEAR 2016 – K A B A L I

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Actress Surabhi Santosh Stills 015
Actress Surabhi Santosh Stills Gallery

Close