அந்த நாலு பேரைதான் தேடிகிட்டு இருக்கேன்! – வளர்ந்தும் வளராத ஹீரோ ஹரீஷ்

புகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார்.

குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல, ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில் ஆரம்பித்து தனுஷ் வரை சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய கஸ்தூரிராஜாவின் (காதல் வரும் பருவம் படத்தின் மூலம் )அறிமுகம் தான் அரீஷ் குமார்..

இன்றைக்கும் எவர்கிரீனாக ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் சிந்துபைரவி, புன்னகை மன்னன், அண்ணாமலை,பாட்ஷா படம் உட்பட ரஜினி, கமல் என ஸ்டார் நடிகர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கணேஷ்குமாரின் மகன்.

ஆக, வாரிசு அடிப்படையில் சினிமாவில் நுழைவதற்கான வாய்ப்பு சுலபமாக தேடிவந்தாலும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அரீஷ்குமார், நம்மிடம் இன்றைய சினிமாவின் சூழல், அதில் தனது எதிர்காலத்திற்கான ஓட்டம் குறித்த விஷயங்களை பகிர்ந்துகொண்டார்..

அறிமுகமே பெரிய இயக்குநரின் படம்.. ஆனால் ரசிகர்களிடம் இன்னும் உங்களை நன்கு அடையாளப்படுத்தவில்லையே..?

ஒப்புக்கொள்கிறேன்.. மிகப்பெரிய இயக்குநர் படத்தில் அறிமுகம், முதல் படத்திலேயே அப்போதைய முன்னணி நடிகை கிரணுடன் ஜோடி என எல்லாம் நன்றாகவே அமைந்தது.. ஆனால் அந்தப்படம் சரியாக போகாததால் எனக்கு அடுத்தபடமான ‘புகைப்படம்’ படத்தின் வாய்ப்பு கிடைக்கவே இரண்டு வருடங்கள் ஆனது. இன்று ஒருவரை நல்ல நடிகராக பார்க்கவேண்டும் என்றால் அவர் படம் வெற்றி அடைந்திருக்கவேண்டும். வெற்றிதான் ஒருத்தரை கவனிக்க வைக்கிறது.

இன்றைக்கு முன்னணி நடிகராக இருக்கும் விக்ரமை நல்ல நடிகராக புரிந்துகொள்ள சேது படம் வெளியாகி மவுத் டாக் மூலமாக படம் பற்றியும் அவர் நடிப்பு பற்றியும் வெளியே தெரிய வருவதற்கு 4 வாரம் தேவைப்பட்டது. அப்போது அந்த கால அவகாசம் இருந்தது… ஆனால் இன்றைக்கோ 4 மணி நேரத்திலேயே ஒரு படத்தின் தலையெழுத்தை முடிவு பண்ணிவிடுகிறார்கள்.. மவுத் டாக் என்கிற விஷயமே குறைந்துபோய் விட்டது.. இதற்குள் அந்தப்படமும், படத்தில் நடித்த ஹீரோவும் முழுமையாக ரசிகர்களிடம் சேரும் முன்னரே முடக்கிப்போடக் கூடிய சூழல் தான் இன்று நிலவுகிறது. இதை மீறி நம் மீது வெளிச்சம் விழவைப்பது சவாலான ஒன்றாகவே இருக்கிறது.

கோரிப்பாளையம் அப்படி ஒரு வெளிச்சத்தை உங்களுக்கு தந்ததே..?

உண்மைதான்… அதற்குமுன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் கோரிப்பாளையம் தான் என்னை கவனிக்க வைத்தது. ஆனால் அதற்கடுத்து என்னை மட்டும் தனியாக அடையாளப்படுத்தும் விதமான படங்கள் சரியாக அமையவில்லை. அப்படி தேர்வு செய்து நடித்த படங்களும் வெற்றி பெறாததால் மீண்டும் ஒரு அறிமுக நடிகருக்கான வேகத்துடன் தான் ஓடவேண்டி இருக்கிறது.

மாறிவரும் இன்றைய சூழலில் வளரும் நடிகராக நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன..?

சினிமாவிற்கு புதியவர்களாக இருந்தால், ஒரு படம் தோல்வி என்றால் அடுத்து வேறு ஏதாவது வேலையை பார்க்க போய்விடுவார்கள்.. ஆனால் நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவன். சினிமாவை அணுஅணுவாக ரசித்து வளர்ந்தவன்.. அப்படி நான் நேசித்த சினிமாவை விட்டு எங்கே போவது…? தொலைத்த இடத்திலேயே தான் தேடியாக வேண்டும். அந்த தேடலில், அந்த ஓட்டத்தில் நம்மை நிறுத்திக்கொள்வதற்காக ஒன்றிரண்டு படங்களை ஒப்புக்கொண்டு நடித்ததும் கூட தவறாகப் போய்விட்டது..

ஆனால் அந்தப்படங்களில் கூட எனது நூறு சதவீத உழைப்பை நான் கொடுக்கவே செய்தேன்.. ஒரு இயக்குநர் பத்து தோல்விப் படங்கள் கொடுத்தாலும் கூட ஏதோ ஒருகட்டத்தில் மீண்டும் எழுந்து தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்த ஒரு நடிகனுக்கு அப்படியான வாய்ப்பு ரொம்பவும் குறைவு தான்.

வாரிசு நடிகர் என்பது உங்களது பலமா இல்லை பலவீனமா.?

பலமும் அதுதான்.. பலவீனமும் அதுதான்.. அப்பா நூறு படங்களுக்கு மேல் பணியாற்றிய பிரபலமான எடிட்டர் என்பது எனக்கு விசிட்டிங் கார்டு மாதிரித்தான். அதை வைத்து எங்கேயும் உள்ளே சென்று, யாரையும் சந்தித்துவிட முடியும்.. ஆனால், வாய்ப்பை நமது திறமையை விட, நம் தந்தை யார் என்பதைவிட, அதற்கு முந்தைய நமது வெற்றி தான் தீர்மானிக்கிறது. ஆனால் அப்படி கிடைக்கும் வாய்ப்பை தக்கவைக்க போராடித்தான் ஆகவேண்டும்.

திரையுலகில் ஒரு சிறு குறை சொல்லமுடியாதபடி, அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவர் எனது தந்தை. என் சிறுவயது வாழ்க்கையில் பாதி நேரம் என் அப்பாவின் எடிட்டிங் டேபிளின் முன் அமர்ந்துகொண்டு ரஜினி, கமல் படங்களாகப் பார்த்து பார்த்து, நடிப்பில் குறை, நிறைகளை எப்படி சரிசெய்வது என்கிற விதமாக சினிமாவை கற்றுக்கொண்டு வளர்ந்தவன் நான்..

பாலசந்தர் சாரின் மின்பிம்பங்கள் தொடருக்கு நான் உதவி எடிட்டராக பணியாற்றியுள்ளேன்.. இது என் தந்தை எனக்கு கொடுத்த பலம். அவர் இன்று இருந்திருந்தால் எனது முதுகெலும்பாக இருந்திருப்பார் என்பதை மறுக்கமுடியாது.

இனிவரும் நாட்களில் பட ரிலீஸில் எந்தவிதமான சவால்கள் உங்கள் முன்னே இருகின்றன..?

தற்போது ஒருநல்ல கதையை தேர்வு செய்து ஒப்புக்கொண்டுள்ளேன்.. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது. இந்தப்படம் நன்றாக முடிந்து, அது ஒரு நல்ல விநியோகஸ்தர் கைகளுக்கு சென்றாலும் கூட, ரிலீஸ் விஷயம் சவாலான ஒன்றாகத்தான் இருக்கும். சின்ன படங்களுக்கு ஒரு நாள், பெரிய படங்களுக்கு மூன்றுநாள் என ஒரு படத்தின் தலையெழுத்தை முடிவுசெய்துவிட்டார்கள்.

‘பாட்ஷா’ படத்தின் 175வது நாள் வெள்ளிவிழா ஷீல்டை என் தந்தையுடன் சூப்பர் ஸ்டார் ரஜினி கையால் நான் பெற்றுக்கொண்டபோது எவ்வளவு பெருமிதமாக இருந்தது தெரியுமா…? ஆனால் இன்றைக்கு ஒரு படம் 25 நாள் ஓடினாலே அது வெள்ளிவிழா என்கிற மாதிரி நிலைமை மாறிவிட்டது.. மக்கள் ஒன்றைவிட, இன்னொன்றை பெட்டராக எதிர்பார்க்கிறார்கள்.. இதற்குள்ளாக நாம் எப்படி சூத்தரதாரியாக இருந்து வெற்றியை பெறுகிறோம் என்பதுதான் சவாலே..

வெற்றிக்கோ, தோல்விக்கோ நம்மைச்சுற்றி நான்கு பேர் காரணமாக இருப்பார்கள்.. நானும் அப்படிப்பட்ட நான்கு பேர்களை தேடிக்கொண்டு இருக்கிறேன். இந்த சவால்களை சந்தித்து மீண்டு(ம்) வருவேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்கிறார் சற்றும் தன்னம்பிக்கை குறையாத அரீஷ் குமார்.

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
vadi
வடிவேலு சகாப்தம் முடிந்ததா?

https://www.youtube.com/watch?v=_7lUCX9tXGQ

Close