எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது- விமர்சனம்

கவுண்டரின் வாய்ஜாலம், தமிழ்சினிமாவுக்கே வர்ணஜாலம்! ஆண்டாண்டு காலமாக தொடரும் இந்த அற்புதத்தை, தனது எழுபதாவது வயதிலும் இளைக்காமல் வைத்திருக்கிறார் கவுண்டமணி! அவர் வாயைத் திறந்தால், கலீராகிறது தியேட்டர். அவர் வராத காட்சிகள் ஒவ்வொன்றும் அவர் வருவாரா என்று ஏங்க வைக்கிறது. மாடு இளைத்தாலும், மடி இளைக்காமல் வைத்திருக்கிற இயற்கையை நோக்கி வணங்கித்தான் ஆக வேண்டும் இந்த ஜகஜ்ஜால கவுண்டமணி!

இன்னும் என்னய்யா கவுண்டர் கவுண்டர்னுகிட்டு? என்கிற வாயையெல்லாம், தன் கலகலப்பான வசனங்களாலேயே அடைக்கிறார் இயக்குனர் கணபதி பாலமுருகன். கவுண்டமணியின் ரசிகர்கள் மட்டுமல்ல, கலகலப்பை விரும்பும் யாவருக்குமான டிபார்ட்மென்ட் ஸ்டோர்தான் இந்த ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது!’

கவுண்டரின் முழு நேர வேலை, ஷுட்டிங்குகளுக்கு கேரவேன்களை சப்ளை செய்வது. சொந்தமாக இருபது கேரவேன்களை வைத்திருக்கும் செல்வந்தரான அவருக்கு பகுதி நேர ஜாப், காதலர்களுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டு கல்யாணம் செய்து வைப்பது. தன் ஒவ்வொரு கருத்தையும், செயலையும் உடனுக்குடன் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் ஆள் வைத்து (?) பதிவேற்றும் அவர், இந்த லவ்வர்ஸ் மேட்டருக்காகவே பலரையும் பகைத்துக் கொள்கிற விஐபியும் கூட! இந்த நேரத்தில்தான், மதுரையில் இருக்கும் பிரபல அரசியல் தலைவர் ஒருவரின் மகளான ரித்விகாவை லவ் பண்ணி தள்ளிக் கொண்டு வந்துவிடுகிறார் சவுந்தர்ராஜா. ஒருபுறம் ரவுடிகள் காதல் ஜோடியை தேடி வர, இன்னொரு புறம் அதே ஜோடியை தன் கேரவேனில் ஏற்றிக் கொண்டு மதுரைக்கே கிளம்புகிறார் கவுண்டர்.

காதலர்களை சேர்த்து வைத்தாரா என்பது முடிவு!

சினிமாக்காரர்களை மட்டுமல்ல, அரசியல்வாதிகளையும் அள்ளிப் போட்டு மொத்துகிறார் கவுண்டர். “டேய்… அதென்னடா எவன கேட்டாலும் மதுரை என்னுது… மதுரை எனக்குன்னே சொல்றான். ஏன்… நார்த் ஆற்காடு, தருமபுரியெல்லாம் என்ன பாவம் பண்ணுச்சு. அதையும் என்னுது சொல்ல வேண்டியதுதானேய்யா…?” என்கிறபோது தியேட்டர் துவம்சம் ஆகிறது.

அண்ணே கவுதம் மேனன் படத்துக்கு கேரவேன் கேட்கிறாங்கண்ணே…

ஈசிஆர்ல இருக்கிற காபி ஷாப்தானே? அனுப்பு.

அண்ணே… விஷால் படத்துக்கு கேரவேன் கேட்கிறாங்கண்ணே…

பின்னி மில்லுக்குதானே, அனுப்பு….

அண்ணே எப்படிண்ணே, ஆளை சொன்னா ஷுட்டிங் ஸ்பாட்டை சொல்றீங்க, ஷுட்டிங் ஸ்பாட்டை சொன்னா ஆளு யாருன்னு சொல்றீங்க? என்று கேட்கிற அசிஸ்டென்டிடம், டேய்… எனக்கு மட்டுமில்லடா. தமிழ்நாட்டு ஜனங்களுக்கே இது தெரியும்டா… என்கிறார் கவுண்டர்.

கேட்க வேண்டுமா, தியேட்டர் கொலீர் ஆகிறது. இப்படி படம் முழுக்க கவுண்டரின் ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கிறது. அண்ணே…ஜி.வி.பிரகாஷ் நடிக்க வந்திட்டாரு. எஸ்.ஜே.சூர்யா இசையமைக்கிறாரு என்று அவரை சுற்றியிருப்பவர்களும் கூட வசனங்களால் தெறிக்க விடுகிறார்கள். இப்படி சொல்லப் போனால், முழு படத்தின் டயலாக்கும் வந்து விழுந்துவிடும் என்பதால் நெக்ஸ்ட்!

இவ்வளவு தெளிவாக இருக்கிற கவுண்டர், அவரே ஒரு பைட் காட்சியில் தடி தடியான அடியாட்களை புரட்டி எடுப்பதுதான், ஐயோடா என்று இருக்கிறது. (ஊருக்குன்னா சுண்ணாம்புத் தூள், உங்களுக்குன்னா சர்க்கரைங்களா?)

படத்தின் துவக்கத்தில் வரும் அந்த கருப்பு வெள்ளை பிளாஷ்பேக் செம!

சமூகத்தில் நடக்கும் எல்லா அவலங்களையும், டிராபிக் ராமசாமி போல தட்டிக் கேட்கும் கேரக்டரில் சவுந்தர்ராஜா. முகத்தில் எந்நேரமும் ஒரு டென்ஷனுடனேயே வருவது கேரக்டருக்குள் கரைந்துவிட்டாரோ என்று தோன்ற வைத்தாலும், காதல் காட்சிகளில் கூட, அதையே மெயின்டெயின் பண்ணுவதுதான் பகீர். இவரும் ரித்விகாவும் லவ்வர்ஸ் என்று காட்டினாலும், ஒரு அன்னியோன்யமும் வெளிப்படவில்லை இந்த ஜோடிக்கு நடுவில்!

அட்வான்சை அப்புறம் கொடு… பேலன்சை முதல்ல கொடு என்று கேட்கிற அந்த திருட்டு முழி வில்லனில் ஆரம்பித்து, மதுரை ரவுடி வளவன் வரைக்கும் அவரவர் பங்குக்கு அசத்தியிருக்கிறார்கள் அசத்தி.

பாடகர் வேல்முருகன் இந்த படத்தில் நடிகராகவும் பிரமோஷன் ஆகியிருக்கிறார். கவுண்டரின் முன்பு தரையில் உட்கார்ந்து தவழ்கிற அளவுக்கு அடக்கம் காட்டுகிறார் மனுஷன். நல்லது நல்லது!

இசை- எஸ்.என்.அருணகிரி. இந்தப்படத்தின் ஆகப்பெரிய அசவுகர்யமே அவர்தான். ஒரு பாடலும் விளங்கவில்லை.

கேரவன் கேரவேன்னு சொல்றாங்களே, அது இப்படிதான் இருக்குமா என்று சராசரி ரசிகர்களை வாய் பிளக்க விட்டதுடன் மட்டுமல்ல, மிக சாதாரணமான ஒரு கதையை மிக மிக சுவாரஸ்யமாக கொடுத்த வகையில், ‘ஆஹா’ போட வைத்திருக்கிறார் இயக்குனர் கணபதி பாலமுருகன்.

கவுண்டர் எங்கிற சிங்கிளா வர்ற சிங்கத்துக்கு எதுக்கு கிளைகள்? உங்க வாய்ஜாலம் தொடரட்டும்ணே…!

-ஆர்.எஸ்.அந்தணன்

To listen the audio click below ;-

 

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Director ManoBala
கல்யாண பத்திரிகை கடைசிவரைக்கும் வரலயே? கவலைப்பட்ட மனோபாலா!

நாற்பதாண்டு கால நட்பை நடிகர் சங்கத் தேர்தல் வந்து கெடுத்துக் குட்டிச்சுவராக்கிடுச்சேப்பா? பின்னே என்னவாம்? பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த காலத்திலிருந்தே நடிகை ராதிகாவின் பெஸ்ட் பிரண்டு...

Close