டோரா /விமர்சனம்

‘நாயடி பேயடி’ என்கிற வார்த்தை, நாட்டுபுற மேடைகளில் சகஜம்! நிஜமாகவே ஒரு நாய் அடித்திருக்கிற பேயடிதான் படமே! தமிழ்சினிமா எத்தனையோ பேய் பிசாசுகளை பார்த்திருக்கிறது. பில்லி சூனிய ஆவிகளை கொண்டு பரவசப்படுத்தியிருக்கிறது. ஆனால் இடப்படத்தில் வருவதோ வெறும் மானுட ஆவியல்ல. அதையும் தாண்டி ஆங்காரமான ஒரு நாயின் ஆவி. அது ஒரு காருக்குள் போய் புகுந்து கொண்டால் அந்த கார் என்னாகும்? அந்த காருக்குள் பயணிக்கும் ஆட்கள் என்னாவார்கள்? அந்த காருக்கும், காருக்குள்ளிருக்கும் ஆவிக்கும் இந்த காரின் ஓனரம்மா மீது ஏன் இத்தனை பாசம்? இப்படி நிறைய நிறைய சிக்னல்களை தாண்டி நேர்த்தியாக டிரைவிங் பண்ணியிருக்கிறார் அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி. லொள் ஜொள் இல்லாத தில்லான புதுக்கதை.

தன் அத்தையை போல தானும் ஒரு டிராவல்ஸ் நிறுவனம் வைக்க வேண்டும் என்று நினைக்கும் நயன், அப்பா தம்பி ராமய்யா உதவியுடன் ஒரு அரத பழசான காரை வாங்கி வீட்டு வாசலில் நிறுத்துகிறார். அந்த காருக்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. வடமாநில கொள்ளையர்கள் மூவர், காருக்கு சொந்தமான ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்கிறார்கள். காப்பாற்ற வரும் நாயும் சிறுமி நினைப்பிலேயே செத்து மடிய… அந்த நாயின் ஆவி அந்த காருக்குள் ஷிப்ட் ஆகிறது. இறந்து போன சிறுமியின் இதயம், நயனுக்கு பொருத்தப்பட… இப்போது காருக்குள்ளிருக்கும் ஆவிக்கும், நயனுக்குள்ளிருக்கும் இதயத்திற்கும் ஒரு இன்டர்லிங்க் ஏற்படுகிறது. கார் நயன்தாரா கைக்குப் போனதும் நடக்கும் அதிரடி திருப்பங்கள் என்ன? வட மாநில கொள்ளையர்களுக்கு சங்கு ஊதியது யார்? இதுதான் க்ளைமாக்ஸ்.

‘வரவர நயன்தாராவின் கதை செலக்ஷனை கரையான் அரிச்சுருச்சோ?’ என்று அஞ்சுவது மாதிரிதான் இருக்கிறது படத்தின் ஆரம்ப நிமிஷங்கள். அதற்கப்புறம் நாயும் காருமாக அவர் விஸ்வரூபம் எடுக்கும் போதுதான் நயன்தாராவின் கதையறிவும், புலனறிவும் நமக்கு புரியவருகிறது. இப்படியொரு கதையில் அப்படியே அச்சு அசலாக தன்னை தாரை வார்த்துக் கொள்கிற பக்குவம் நயனுக்கு நிரம்பவே இருக்கிறது. சில காட்சிகளில் போலீஸ் கண்ணில் மண்ணை தூவிட்டேன் என்ற மிதப்புடன் அவர் காட்டுகிற கெத்தும் அந்த நடையும் செம ‘தில்’மா! சுற்றி சுற்றி நயன்தாராவை மட்டுமே பின் தொடர்கிறது கேமிராவும் படமும். ஆனால் அவ்வளவு சுமையையும் தன் திமிரால் சுமக்கிறார் அவர். அந்நியன் விக்ரம் போல ஒரு சீனில் நடித்துக் காட்டும் நயனின் நடிப்புக்கு திருவிழா கூச்சலிட்டு கொண்டாடுகிறது தியேட்டர்.

‘பவளப் பையா.. பவளப் பையா…’ என்று மகள் நயன்தாராவிடம் தம்பி ராமய்யா காட்டுகிற அன்பும் அச்சமும் ஆரம்பத்தில் நாடகத் தனமாக இருந்தாலும், பிற்பாதி கதைக்குப்பின் அவ்வளவும் உயிர்ப்பாகிவிடுகிறது. கொஞ்சம் ஓவர் ஆக்டிங்தான். மன்னிச்சுடுறோம் தம்பி சார்…

நயன்தாராதான் கொலைகாரி என்பது தெரிந்தும் நிரூபிக்க முடியாமல் திண்டாடும் ஹரீஷ் உத்தமனின் கோபம், அளவான நடிப்பு. அசத்தல்!

அதற்கப்புறம் படத்தில் நடிகர்கள் யார் யார் என்னென்ன பண்ணியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் விட, அந்த காரும், அந்த காரை அப்படியே ஒரு நாயின் பாடி லாங்குவேஜுடன் பொருத்தி மிரட்டியிருக்கிற கிராபிக்ஸ் காட்சியும்தான் கவனத்தை ஈர்க்கிற மெட்டீரியல்! விஎப்எக்ஸ் ஹரிஹரசுதனுக்கு தனி பாராட்டுகள்.

ஒரு டிராவல்ஸ் நிறுவனம் இவ்வளவு அரத பழசான காரை வைத்திருக்குமா? அதை நம்பி திருப்பதி வரைக்குமெல்லாம் டூர் போக வாடிக்கையாளர்கள் ஆசைப்படுவார்களா? அந்த கார் நயன்தாரா வசம் வருவதற்கு இவ்வளவு வறட்சியான காட்சியமைப்பு தேவையா? என்றெல்லாம் கேள்விகள் வராமலில்லை.

படம் மெல்ல ஹாரர் படமானதும், தன் பின்னணி இசையால் பிரமிக்க வைக்கிறார்கள் இரட்டை இசையமைப்பாளர்கள் விவேக் மெரிவின். பாடல்களில்தான் படு பயங்கர அப்செட்!

கடத்தப்பட்ட அப்பாவின் பெட்ஷீட்டை காருக்கு மோப்பம் பிடிக்க கொடுத்துவிட்டு அவரை நயன்தாரா கண்டு பிடிக்கும் அந்த காட்சி மட்டுமல்ல… மூன்று கொலைகாரர்களையும் ஓட ஓட துரத்திக் கொல்கிற அந்த காட்சிகள் முன்னணி ஆக்ஷன் ஹீரோக்கள் நடித்தால் கூட இவ்வளவு விறுவிறுப்பாக அமைந்திருக்குமா? ஆச்சர்யம்தான்.

குழந்தைகளுக்கு மட்டுமே பிடித்த டோராவை கிண்டர் கார்டன் தாண்டியும் ரசிக்க வைத்திருக்கிறார் தாஸ் ராமசாமி.

தாஸ்… தாஸ்… நீ(ங்க) இப்போ ‘ப்பாஸ். ப்பாஸ்’!

-ஆர்.எஸ்.அந்தணன்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
“Life Is Like Variety Rice”- Namitha Philosophy
“Life Is Like Variety Rice”- Namitha Philosophy

https://www.youtube.com/watch?v=r4Htwe4jX8s

Close