சென்னை 28 பார்ட் 2 விமர்சனம்

கே.ஆர்.விஜயா சிரிப்பை, சினேகா வந்து ‘ரீ நியூ’ செய்தாரல்லவா? அதற்கு சற்றும் சளைக்காததுதான் சென்னை 28 பார்ட் 2. பழைய போர்வை துணியில் புதிய ஜீன்ஸ் சகிதம் வந்திருக்கும் இந்த டீமை காட்சிக்கு காட்சி கைதட்டி வரவேற்கிறது தியேட்டர். அப்பவே தெரிஞ்சுருச்சு… இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ்ல, ‘ராக்ஸ்’ ஆகப் போகிற விஷயம்.

சென்னை 28 ன் பேச்சுலர் டீம், பத்து வருஷங்களுக்கு பின் குடும்பம் குட்டியுமாக திரிகிற நண்பர்களோடு அறிமுகம் ஆகிறது. “இவன்தாங்க அவன்… அவன்தாங்க இவன்” என்றெல்லாம் முன் அறிமுகம் கொடுக்கிற ஸ்டைல் அரத பழசு என்றாலும், வெங்கட்பிரபு தருகிற அந்த முன்னோட்டம், முதல் பார்ட் பார்க்காதவர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் ஆகக் கூட இருக்கலாம்!

நண்பன் ஜெய்யின் லவ் மேரேஜ் நிச்சயதார்த்தத்திற்காக தேனிக்குப் போய் இறங்குகிறது பிரேம்ஜி. சிவா, நித்தின், உள்ளிட்ட பிரண்ட்ஸ் டீம். அதுவும் சக பத்தினிகளுடன். போன இடத்தில் பத்து வருஷத்துக்கு முன் ஓடிப்போன நண்பன் அரவிந்த் ஆகாஷை சந்திக்க… அவரால் அங்கும் ஒரு கிரிக்கெட் மேட்ச் ஆட வேண்டிய சுச்சுவேஷன். தேனி ஏரியாவின் லோக்கல் ரவுடியாக அறிமுகமாகும் வைபவுக்கும் இந்த டீமுக்கும் முட்டல் ஏற்பட… வைபவ் செய்யும் தந்திரத்தால், ஜெய்யின் கல்யாணமே நின்று போகிறது. ஏகப்பட்ட இழுபறி ரகளைக்குப்பின் எப்படி காதலியை கைப்பிடித்தார் ஜெய் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

‘சந்தோஷமா வாங்க. வயிறு சுளுக்கிக்கிட்டு போங்க…’ என்ற ஒரே நோக்கத்துடன் ஒவ்வொரு பந்தையும் அடித்து விளாசியிருக்கிறார் டைரக்டர் வெங்கட்பிரபு. ‘இளசுகளின் பல்ஸ் இங்கதாண்டா இருக்கு’ என்று புரிந்து அடித்த வித்தைக்கே மூன்றாவது பார்ட் காத்திருக்கு தல! யூ ட்யூப்பின் சினிமா விமர்சகர்களை குறி வைத்து அடித்திருக்கும் மிர்ச்சி சிவாவின் கேரக்டர், அவ்வப்போது அந்த வேலையை மெனக்கெட்டு செய்து கொண்டேயிருக்கிறது. நிஜத்தின் பக்கத்திலிருக்கிற நாமும், நிஜத்திற்கு வெகு தொலைவில் இருக்கிற ரசிகர்களும் கூட கைதட்ட வேண்டிய தருணங்கள் அவை.

படத்தின் நடுநடுவே வரும் அந்த கிரிக்கெட் மேட்ச், ஐபிஎல் கிரிக்கெட்டையே கூட அசால்ட்டாக தூக்கி அடிக்கிறது. அந்தளவுக்கு சுவாரஸ்யம்.

மார்க்கெட்டில் சற்றே முன் இடத்தில் இருப்பதால், ஜெய் தலையில் இன்னும் கொஞ்சம் வெயிட்டை ஏற்றி வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஹீரோயின் சனா அல்தாப்புடன் டூயட் பாடி, தன் தகுதியை நிறைவு செய்திருக்கிறார் ஜெய்யும். ஆனால் இவரையெல்லாம் அடித்து சாப்பிட்டுவிட்டு முன்னேறுகிறது வைபவின் அசால்ட்நஸ். அந்த பீடி புகையை ஊதியபடியே புல்லட்டில் வரும் அந்த கிராமத்து கெத்து, சர்வ மாஸ்…! கடைசி வரைக்கும் அதை விட்டுக் கொடுக்காத வைபவுக்கு இந்தப்படம் ஏணியல்ல… லிப்ட்!

ஹீரோயின் சனா, வாயை திறந்து பல்லை காண்பிக்காத வரை அழகு!

கண்டுபுடிச்சிட்டேன். இந்தப்படம் அலைபாயுதே… என்று துப்பறிந்து, உட்கார்ந்த இடத்திலிருந்தே ஜேம்ஸ் கேம்ரூனுக்கு சவால்விட்டு, அதை யூட்யூப் திரையில் தெறிக்க விடுவதில் மட்டுமல்ல, வாயை திறந்தாலே யாருக்காவது ‘மண்டகப்படி’ நடத்திக் கொண்டேயிருக்கிறார் மிர்ச்சி சிவா. அவ்வளவும் ‘அடி பின்றீங்க’ ரகம்!

ஒரு சிகை திருத்துகிற தொழிலாளி, இளைஞர்கள் உலகத்தில் எவ்வளவு முக்கியமானவராக இருக்கிறார் என்பதை இளவரசு மூலம் பதிவு செய்திருக்கிறார் வெங்கட்பிரபு. வீட்டுக்கு வரும் அவரிடம், “அண்ணே காபி போடவா?” என்று விஜயலட்சுமி கேட்கிற அந்த ஒரு காட்சி, வினாடியில் கடந்து போனாலும் சாதிய சங்கடங்களின் முதுகில் விழவேண்டிய முக்கியமான பதிவு.

“இந்த பத்து நாள் மட்டும் நான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்துடுறேன். ப்ளீஸ் என்னை விடு” மனைவியிடம் சீறும் நிதின் சத்யா, அதை தொடர்ந்து பேசும் அவ்வளவு வசனங்களும், ஒவ்வொருவர் வாழ்விலும் மாற்றம் ஏற்படுத்துகிற மந்திரம் என்றால் கூட தப்பில்லை!

பிரேம்ஜி வந்தாலே ரகளையாகிறார்கள் ரசிகர்கள். எந்நேரமும் குடி நினைப்போடவே திரியும் அவரும், அவருக்கு சற்றும் சளைக்காத அவரது அப்பா கங்கை அமரனும் கூட்டு போட்டு கும்மியடிக்கிறார்கள். சமயங்களில் இப்படம், ‘குடி… குடியை நினைக்கும்’ என்று பிளேட்டையே மாற்றிப் போட்டுவிடுமோ என்கிற அளவுக்கு அச்சம் ஏற்படுத்துகிறது.

டி.சிவா, சுப்பு பஞ்சு, சந்தானபாரதி என்று படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும், அளவு தாண்டாத நடிப்பால் மனதில் இடம் பிடிக்கிறார்கள். சச்சு மட்டும் வழக்கமான சினிமா பாட்டி! ஃபேக் நடிகர் திலகமான சண்முகசுந்தரம், ஒரு காட்சியில் வந்தாலும் உலுக்கித் தள்ளிவிட்டு போகிறார்.

‘ஜெயிச்சே ஆகணும்’ என்று சர்வ பெரிய போராட்டமே நடத்தும் அரவிந்த் ஆகாஷ், படத்தில் மட்டுமல்ல… நிஜத்திலும் ஜெயிக்கிற அளவுக்கு நடித்திருக்கிறார். ஒரு சிங்கிள் பாட்டுக்கு வந்து ஒரு கல்யாணமே நின்று போக காரணமான மணிஷா யாதவும் அவரது குலுக்கல் ஆட்டமும், சிறப்பு.

வெகு நாட்களுக்குப் பின் யுவனின் இசை. ‘நம்ம ஆர்மோனியப் பொட்டியில ஒரு கட்டை கூட பழசு இல்லேடா…’ என்று சவால் விட்டு கவர்கிறார். அதுவும் பின்னணி இசையை கூட, தனியாக சிடி போட்டு விற்கிற அளவுக்கு அருமை.

மிக லாவகமான எடிட்டிங். வெறும் சினிமா மேட்ச், விறுவிறுப்பான ஐபிஎல் மேட்ச் ஆகிவிடுகிற அளவுக்கு அவர் பண்ணியிருக்கிற ஜிமிக்ஸ்சுக்காகவே பிரவீன் கே.எல் சபாஷ் பெறுகிறார்.

வெள்ளைதாடி வெங்கட் பிரபுவுக்கு, கருப்பு மை தடவி கை குலுக்கிவிட்டு போயிருக்கிறது இந்த பார்ட்2. இனி கலர்புல்தான் எல்லாமே!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

1 Comment

  1. vimalraj says:

    டி.சிவா, சுப்பு பஞ்சு, “சந்தானகிருஷ்ணன்” என்று படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும், அளவு தாண்டாத நடிப்பால் மனதில் இடம் பிடிக்கிறார்கள். சச்சு மட்டும் வழக்கமான சினிமா பாட்டி! ஃபேக் நடிகர் திலகமான “சோமசுந்தரம்”, ஒரு காட்சியில் வந்தாலும் உலுக்கித் தள்ளிவிட்டு போகிறார்.

    அந்தணன் சார் நீண்ட காலம் நீங்கள் இந்த துறையில் உள்ளீர்கள் நடிகர்கள் பெயர்களை தவறாக போட்டுள்ளீர்கள் — சந்தானபாரதிக்கும் சண்முகசுந்தரத்திற்கும்

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Mansoor Ali Khan Thrashes Sasikala-Jaya Mystery.
Mansoor Ali Khan Thrashes Sasikala-Jaya Mystery.

https://youtu.be/lc1VyXiEsE4  

Close