சென்னை டூ சிங்கப்பூர் விமர்சனம்

உதவி இயக்குனரின் ஒவ்வொரு நாள் அவஸ்தையையும் ஒன்றாக சேர்த்தால், அதுவே ஒரு சூப்பர் ஹிட் கதையாகிவிடும்! இந்த ஐடியாவுக்கு சிறகுகள் முளைத்து சிங்கப்பூர் வரைக்கும் போனால்? அதுதான் இந்தப்படம்! ‘உங்க சிரிப்புக்கு நாங்க கியாரண்டி’ என்கிறார்கள் இப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் புது முகங்கள்.

‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்கிற பார்முலாவுக்கு பழகிப் போன தமிழனுக்கு, இங்கு சிரிப்புடன் சேர்த்து இன்னொன்றும் இலவசம். அது? சிங்கப்பூரின் அழகு!

கதை சொல்லிவிட்டு பல மாதங்களாக காத்திருக்கும் கோகுல் ஆனந்த், அதே தயாரிப்பாளரால் அவமானப்படுத்தப்படுகிறார். அந்த நேரத்தில்தான் ‘சிங்கப்பூரில் ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார். போ…’ என்று அனுப்பி வைக்கிறான் நண்பன். போன இடத்தில் பொட்டி முதல் ஜட்டி வரை சகலத்தையும் பறிகொடுக்கும் ஹீரோ, எப்படி படமெடுத்து கரையேறுகிறார் என்பதுதான் சென்னை டூ சிங்கப்பூர்.

கோகுல் ஆனந்துக்கு லேசாக அஜீத்தின் குரல். அதுவே நமது மூளையின் சந்தோஷப்பக்கங்களை தட்டிவிட…. தொடர்ந்து அவரை ரசிக்க ஆரம்பிக்கிறோம். தம்பி தேறிடுவாப்ல… என்று மனசு சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே இவரது நண்பராக ராஜேஷ் பாலச்சந்திரன் என்ட்ரி. அட… அவரை இவர் முந்துறார்ப்பா… என்று வாய் முணுமுணுக்கிறது. இருவரும் சேர்ந்து கொடுக்கும் அலப்பறைகள்தான் தியேட்டரை துளி அலுப்பில்லாமல் வைத்துக்கொள்கிறது. ஹீரோயின் அஞ்சு குரியனை ரகசியமாக சந்திக்க கோகுல் நினைக்க, அதற்கு ராஜேஷ் உதவுகிற காட்சிகள் எல்லாமே பகீர் சிரிப்பு ஏரியா.

தமிழ்சினிமா மறந்தே போன ப்ளட் கேன்சர் விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அறுத்துக் குவிக்க போறானுங்கடா… என்று அச்சப்பட்டால், அது ச்சும்மா ஊறுகாய்க்குதான். நோ அழுகாச்சி என்று கான்பிடன்ட்டாக நகர்கிறது கதை.

அஞ்சுக்குரியன் அழகோ அழகு! படத்தில் இவருக்கு கேன்சராச்சே? அளவோடு சிரித்து, அளவோடு அழுது, அளவோடு காதலிக்கிறார். எண்ணி இரண்டே இடங்களில் சிரிப்பதாக ஞாபகம். (எந்த பவுர்ணமி வாய் திறந்து சிரிக்கிறது. இருந்துட்டுப் போ அழகே)

படத்தின் கடைசி அரை மணி நேரத்தை சிங்கக்பூர் மலேசியா ‘டான்’கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். துப்பாக்கி முனையில் கடத்தப்படும் அந்த நபர், இந்த ஷுட்டிங்குக்காக எத்தனை நாட்கள் குனிந்தே நடந்தாரோ? ஐயோ பாவம். அவரது முதுகு வலிக்கு நமது கைதட்டல்கள் மருந்தாகட்டும்.

பிரபல ஜிப்ரானே தயாரித்திருக்கிற படம். மியூசிக் சொத்தையாகவா இருக்கும்? பின்னணி இசையும் பாடல்களும் மிரள வைக்கின்றன. அதுவும் படத்தின் முதல் பாதியில் வரும் இரண்டு பாடல்கள் டாப் கியர்.

சிங்கப்பூரை வஞ்சகமில்லாமல் அள்ளிக் கொண்டு வந்து தியேட்டர் தியேட்டராக சேர்த்த ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்துவுக்கு தனி அப்ளாஸ் கொடுக்கலாம்.

அலுப்பில்லாத பயணம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Mayavan-Review
Maayavan Review – Sundeep Kishan – Lavanya Tripathi – C.V. Kumar – Valai Pechu

https://www.youtube.com/watch?v=g4LW4Yg5Rfg&t=251s

Close