பலே வெள்ளையத் தேவா -விமர்சனம்

அருவா தேய்ஞ்சு அருவாமனை ஆகிற வரைக்கும் ஆக்ஷன் படம் பண்ணிய சசிகுமாருக்கு, அருவா மேல வெறுப்பு வந்ததும் ஒரு விதத்தில் நல்லதுதான்! இப்படி மாறுபட்ட மனசோடு அவர் நடித்த இந்த சிரிப்புப் படத்தை பார்க்க உள்ளே போனால், “எங்கேப்பா… அந்த பழைய அருவா? அதையே சாணை பிடிச்சு கொடுத்துருங்க…” என்கிற அளவுக்கு இருக்கிறது நிலைமை!

மாற்றலாகி வேறு கிராமத்துக்கு வரும் போஸ்ட் வுமனின் மகன் சசிகுமாருக்கு அதே ஊரிலிருக்கும் தன்யா மீது காதல். அது ஒரு ஓரமாக போய் கொண்டிருக்க, லோக்கல் கேபிள் சேனல் நடத்தும் வளவனுக்கு அந்த ஊரில் யார் குடை விரித்தாலும் பிடிக்காது. (குடைன்னா அந்தக் குடையில்ல. இது டிடிஎச் சட்டி!) சசிகுமார் வீட்டிலும் அப்படியொரு சட்டி தொங்குவதை கண்ட வளவன், அம்மா ரோகிணியை அழைத்து கண்டபடி ஏச… மகன் சசி விடுவாரா? பொங்குகிற பெரும் கோபத்துடன் போட்டு சாத்துகிறார் வளவனையும், மற்றும் சில ஊர் பெருசுகளையும். பிற்பாதியில் அவர்களின் வில்லத்தனத்தை வென்று, காதலியை கை பிடிப்பதே கதை! ஆங்… முக்கியமான விஷயம். படத்தில் கோவை சரளாவுக்கு முக்கியமான ரோல். தமிழர்கள் வசிக்கும் பகுதியிலிருந்தே இவரை நாடு கடத்திவிடுவது எதிர்கால சினிமாவுக்கு நல்லது!

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் சசிகுமார், (ஆமாம்… என்ன வேலை பார்க்குறாரு?) அந்த ஊர் அழகியை பார்க்காமலே செல்ல, அவர்தான் இவர் தன்னையே சுற்றி சுற்றி வருவதாக எண்ணிக் கொள்கிறார். “அவன் என்னையே சுத்துறான்ப்பா…” என்று அப்பாவிடம் கம்ப்ளைன்ட் பண்ணுகிறார். விசாரிக்க நேர்கிற அந்த தருணத்தில்தான் சசி, தன்யாவை முதன் முறையாக நோக்குகிறார். அந்த சுச்சுவேஷன் செம்ம! அதற்கப்புறம் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக நம்மை நிமிர வைக்கிறது டைரக்டரின் யுக்தி. குறிப்பாக, சசியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு செல்லும் ரோகிணி, ஒவ்வொருவராக பார்த்து “அவனை அடி… இவனை அடி…” என்று உசுப்பேற்றும் காட்சி.

என்னதான் காமெடி படம் என்றாலும், இப்படி இரண்டு மொன்னை வில்லன்களா? அங்கேயே குடை சாய்ந்துவிடுகிறதே படம்? சுப்ரமணியபுரம், சுந்தர பாண்டியன் போன்ற படங்களில் நடித்த சசிகுமாரா இது? எங்க போச்சு இவரது அனுபவமும் யோசனையும்?

கதையும் காட்சிகளும் கூட பரவாயில்லை. படத்தின் காஸ்ட்டிங்தான் கர்ண கொடூரம். கோவை சரளாவில் ஆரம்பித்து, சசியுடன் படம் முழுக்க வரும் அந்த காமெடியன் வரைக்கும் ஒருவர் பாக்கியில்லாமல் காதில் புகை வர வைக்கிறார்கள். இந்த காமெடியனுக்கு பதிலாக சூரியோ, அல்லது மயில்சாமியோ… கோவை சரளாவுக்கு பதிலாக அந்த கிராமத்திலிருந்தே பிடிக்கப்பட்ட ஏதாவது ஒரு பாட்டியோ இருந்திருந்தால் கூட படம் வசீகரம் செய்திருக்கும்! என்ன செய்வது… மேலே போன ராக்கெட்டை வாலை பிடிச்சு இழுக்க முடியாதல்லவா?

மற்றபடி சசிகுமார் பழமுதிர்ச்சோலை ஆப்பிள் மாதிரி ஜம்மென இருக்கிறார். அவர் கோபத்தையே பார்த்து பழகிய நமக்கு, எந்நேரமும் சிரித்தபடியே திரிவதை ரசிக்கவும் முடிகிறது.

ஹீரோயின் தன்யா, வில்லேஜ் கெட்டப்பிலேயே ‘வௌங்கல’ என்றால், சிட்டி சப்ஜெக்ட்டில்? பிற்காலம் பீன்ஸ் பொரியல்தான்!

அவ்வப்போது அரிவாளை எடுத்து மிரட்டினாலும், பாலாசிங் போலீசுக்கு அஞ்சும் பெருச்சாளி. தன் வரைக்கும் சிறப்பாக நடித்திருக்கிறார் மனுஷன். சங்கிலி முருகனுக்கு முக்கியமான ரோல். நெகிழ வைக்கும் இடத்தில் நெகிழவும் வைக்கிறார். பல இடங்களில் மகிழவும் வைக்கிறார். (சோடிதான் சரியில்ல சார்)

தர்புகா சிவாவின் இசையில் பாடல்களில் அலுப்பு இல்லை. அளப்பறிய விசேஷமும் இல்லை. ரவிந்தரநாத் குருவின் கேமிரா, திலிப் சுப்பராயனின் ஸ்டன்ட் இரண்டுமே சிறப்பு.

பலமேயில்லாத பலே…!

-ஆர்.எஸ்.அந்தணன்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
goutham-menon-dhanush
இசை யாருங்க? மாறி மாறி ஏமாற்றிக் கொள்ளும் கவுதம்மேனன் தனுஷ்!

Close