பாகுபலி 2 – விமர்சனம்

இந்திய சினிமாவின் எவரெஸ்ட் ஆகியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமவுலி. ‘இமையே… கொஞ்ச நேரம் சும்மாயிரு’ என்று இமைக்கிற போதெல்லாம் நம் கண்கள் மீது நமக்கே கோபம் வருகிறது. அப்படியொரு பிரமாண்டமும், அழகும் கொஞ்சி விளையாடுகிறது ஒவ்வொரு காட்சியிலும். போன பிறவியில் பேரரசனாகப் பிறந்த ஒருவனின் செல்களுக்குதான் இந்த வித்தை கை கூடும்! ஐயா…. ராஜமவுலி. நல்ல சோதிடன் கிடைத்தால் நீங்கள் யார்? என்று கேட்டுப் பாருங்கள். உலகையே வியக்க வைத்த உங்களையே வியக்க வைக்கலாம் அந்த சோதிடன்!

பாகுபலி முதல் பகுதியின் முடிவிலிருந்துதான் தொடங்குகிறது படம். கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்? சுமார் இரண்டு வருஷமாக அல்லாடி வந்த இந்த கேள்விக்கு விடை தேடும் வேகத்தோடு ஓட ஆரம்பிக்கிறது காட்சிகள். வேகம்…வேகம்… யானை வேகம். குதிரை வேகம்! இன்டர்வெல் சமயத்திலெல்லாம் பி.பி.உச்சத்தில் ஏறி நிற்கிறது நமக்கு. அப்படியே கட்டப்பா பாகுபலியை குத்தி சாய்க்கிற இடம் வந்ததும் ஆசுவாசமாகி அதன்பின் மீண்டும் ஓட ஆரம்பிக்கிறோம். சுமார் மூன்று மணி நேர படம், நிமிஷத்தில் முடிந்ததாக ஒரு எண்ணம்.

படத்தில் வீசுகிற காற்று கூட நன்றாக நடித்திருக்கிறது என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடுவதுதான் நல்லது. அந்தளவுக்கு படத்தில் வரும் எல்லா கேரக்டர்களும், அப்படியே வாழ்ந்து தொலைத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் அப்போதுதான் பிறந்த குழந்தையை காட்டுகிறார்கள். அதற்கு கூட எத்தனை குழந்தைகளை தேடி தேடி தேர்வு செய்தாரோ ராஜமவுலி? இந்தக்குழந்தையின் முகத்தில் அந்த ராஜ களை தாண்டவம் ஆடுகிறது.

சரித்திரக் கதைகளில் வரும் ராஜா, அந்த ராஜாவை சுற்றி காதல், வீரம், துரோகம், நயவஞ்சகம், சூழ்ச்சி, அதிரடி என்று என்னென்னவோ சுற்றி சுற்றி அடிக்கும். அத்தனையையும் இங்கே காட்சிகளாகவே பிரசன்ட் பண்ணி விடுகிறார். அதற்காக இந்த பாகுபலி டீம் உழைத்திருக்கும் உழைப்பும் கற்பனையும் சொல்லில் அடங்காது. ஒருமுறை தியேட்டரில் பார்த்தால்தான் அதன் நேர்த்தி புரியும். அதுவும் போர்க்கள காட்சிகள் ஒவ்வொன்றும் அந்த கால ராஜாக்களின் நாடி நரம்பெல்லாம் எந்தளவுக்கு முன்னெச்சரிக்கையோடு இருந்தன என்று நினைத்து நினைத்து பெருமைப்படும் தருணம்.

அமரேந்திர பாகுபலி, மகேந்திர பாகுபலியாக பிரபாஸ். மாறுவேடத்தில் மக்கள் குறை காண கிளம்பும் அவர், பக்கத்து நாட்டு இளவரசி அனுஷ்காவை பார்த்த மாத்திரத்தில் லவ் ஆகிறார். அப்பாவி, சாது என்று நினைக்கும் அனுஷ்கா, இவருக்கு வீரத்தை கற்றுக் கொடுக்கும் நிமித்தமாக தன்னுடனே அழைத்துச் செல்ல, எந்த நேரத்திலும் பாகுபலியின் வீரம் அனுஷ்காவால் அறியப்படும் என்று காத்திருக்கிறோம். அந்த நிமிஷமும் வருகிறது. ஆனால் அது வெறும் சாதாரண சண்டையா என்ன? கோட்டை கொத்தளமே மிரள்கிற அளவுக்கு மூளைக்கும் தோளுக்கும் வேலை கொடுக்கிற சண்டை. அப்படியே அனுஷ்கா அவன்பால் காதலாகி கசிந்து, நீ யார் என்று கேட்க, அந்த நிமிஷம் பார்த்து அரண்மனையிலிருந்து அம்மா சிவகாமி ராஜமாதா அனுப்புகிற ஓலையும், அதிலிருக்கிற விஷயமும் படு ட்விஸ்ட் கிளப்புகிறது. அதற்கப்புறம் காதலியையே கைதியாக கொண்டு வருகிறார் பிரபாஸ். அரண்மனைக்கு வந்ததும் நடக்கிற ட்விஸ்ட்டுகள்தான் படத்தின் முதுகெலும்பே!

பிரபாசுடன் மோத மிக சரியான நபராக ராணா டகுபதி. இவர்கள் இருவருமே இப்படத்தில் செய்திருப்பது வாழ்நாள் சாதனை. மோதுகிற மோதலில் மலை பிளப்பதென்ன? அனல் பறப்பதென்ன? பயங்கரம்…! அதுவும் அந்த க்ளைமாக்ஸ் சண்டை காட்சி, சற்றே நீளம் என்றாலும் நிமிஷத்துக்கு நிமிஷம் பரபரப்பு.

பாகுபலி முதல் பார்ட், மற்றும் இந்த செகன்ட் பார்ட் இரண்டிலும், தலை நிமிர்ந்து நிற்பதென்னவோ ராஜமாதா ரம்யா கிருஷ்ணன்தான். சட்டென்று குழந்தையை உயரே தூக்கி, அவனை நாட்டின் மன்னனாக அறிவிக்கும் அந்த காட்சியில் மெய் சிலிர்க்கிறது. ‘இதுவே என் கட்டளை. அதுவே என் சாசனம்’ என்று அவர் சொல்கிற போதெல்லாம், ஒரு ராணுவ பீரங்கி வெடித்த கம்பீரம் அதில்.

“உன் தாய் வளர்த்த நாய் வருகிறது” என்று அசால்ட்டாக கட்டப்பா சத்யராஜை எள்ளி நகையாடும் நாசர், “நீர் நடிகன்யா….” கொண்டாட விடுகிறார். என்னாவொரு வில்லத்தனம்?

ஐயோ பாவம் தமன்னா. இந்த பார்ட்டில் அவருக்கு ஒரு குளோஸ் அப் கூட இல்லை.

கோத்தகிரி வெங்கடேஷ்ராவின் எடிட்டிங், மிக துல்லியமாக கையாளப்பட்டுள்ளது. இல்லையென்றால், இந்தப்படத்தின் நீளம் நம்மை கொட்டாவி விட வைத்திருக்கும். கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கொட்டப்பட்டிருக்கும் கோடிகளையும், அந்த கோடிகளை விழுங்கிய உழைப்பையும் துளி சேதாரமின்றி நமக்குள் கடத்துகிறது. பாடல்களும், ட்யூனும் ஒரே மாதிரி இருந்தாலும், பின்னணி இசையில் மிரட்டித் தள்ளியிருக்கிறார் மரகதமணி. ஆனால் அந்த பாடல்களுக்கு சிஜி மூலம் தீட்டப்பட்டிருக்கும் அழகை ரசிப்பதற்காகவே இன்னும் பலமுறை படையெடுக்கலாம் தியேட்டருக்கு. ஆர்ட் டைரக்ஷன், காஸ்ட்யூம், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று அவரவர் துறையில் மிரட்டியிருக்கிறார்கள்.

என்னதான் இருந்தாலும் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் ஒப்பிட மனசு துடிக்கும்தானே? முதல் பகுதியில் நாம் பார்த்த சிவலிங்கத்தை தூக்குகிற காட்சி மாதிரியோ, காக்கத்தீயர்கள் கூட்டம் போலவோ இதில் குறிப்பிட்டு சொல்ல ஒரு விஷயமும் இல்லாமல் போனது ஏமாற்றம்தான்.

இனி எவ்வளவு பெரிய படம் எடுத்தாலும், அவர்கள் ராஜமவுலியை கடந்து முன்னால் செல்ல முடியுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த ஒரு கேள்விதான் பாகுபலிக்கு வருஷா வருஷம் வரவிருக்கும் பட்டாபிஷேகம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
URU Trailer Link
URU Trailer Link

https://www.youtube.com/watch?v=g-HBH8gWmQQ

Close