அச்சமின்றி விமர்சனம்

‘கல்வியா, செல்வமா, வீரமா’ கான்செப்டுக்கு கலர் பெயின்ட் அடித்தால் விறுவிறுப்பான ‘அச்சமின்றி’ தயார்! உப்பு உரைப்பு காரமாக ஒரு ஸ்பெஷல் மெசேஜூடன் வந்திருக்கும் இப்படம், தமிழகத்தின் கல்வி அவலத்தை காற்று வேகத்தில் சொல்கிறது. அந்த வேகம்… வர்தா புயலை விட கம்மி. தானா புயலை விட ஜாஸ்தி என்பதுதான் இப்படத்தின் கூடுதல் கவன ஈர்ப்பு. நடுநடுவே வரும் காதல் காட்சிகள், கேன்டீனுக்கு தரப்படும் எக்ஸ்ட்ரா சலுகை என்று வைத்துக் கொள்ளுங்களேன்…

மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்குவேன் என்று நம்பும் வேலைக்காரி மகள், மார்க் குறைந்ததால் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் அட்மிட்.! மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் சிருஷ்டி டாங்கேவை கொலை செய்ய துரத்துகிறது ரவுடிக்கும்பல் ஒன்று. கல்வி மந்திரி ராதாரவிதான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைத்தால்… டைரக்டர் ராஜபாண்டி அங்கு வைக்கிறார் ட்விஸ்ட். இல்லேங்க… கல்வித் தாய் என்று ஊரே நம்பும் சரண்யா பொன்வண்ணன்தான் அது. ஏன் இந்த கொலை மிரட்டல்? சரண்யாவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? சிருஷ்டியை காதலிக்கும் பிக்பாக்கெட் திருடர் விஜய் வசந்த் உண்மையை கண்டுபிடிக்க எப்படியெல்லாம் உதவுகிறார்? நடுவில் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனிக்கு என்ன வேலை? இப்படி ஏராளமான கேள்விகளை சுமந்து கொண்டு ஓடுகிறது படம்.

சமுத்திரக்கனி போர்ஷன் மட்டும் ‘தத்தக்கா பித்தக்கா’ என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறதே தவிர, கொடுத்த காசுக்கு திருப்தியா ஒரு ஏப்பம் என்று வெளியே வரலாம் ரசிகன்.

விஜய் வசந்த்துக்கு பிக்பாக்கெட் திருடன் வேஷம் அமர்க்களமாக பொருந்தியிருக்கிறது. அவர் பேசும் மெட்ராஸ் பாஷை இன்னும் பொருத்தம். அதிலும் கும்பலாக கிளம்பி பஸ்சில் பிக்பாக்கெட் அடிக்கும் அந்த முதல் காட்சியில் இவர் மட்டுமல்ல, சண்முக சுந்தரம், தேவதர்ஷினி என்று அத்தனை பேரும் ஸ்கோர் அள்ளுகிறார்கள். அதற்கப்புறம் இந்த கும்பல் படத்தின் முக்கியமான சீன்களில் எல்லாம் தலைகாட்டி தியேட்டரை கலகலக்க வைக்கிறது. பைட் சீன்களில் பம்பரமாய் சுழல தயாராக இருந்தும், விஜய் வசந்துக்கு வாய்த்தது ஒரு மொக்கை பைட் மாஸ்டர். வீடியோ கேம்சில் வரும் சண்டையே மேல் என்கிற ரகம் அது.

அதென்னவோ தெரியவில்லை. தமிழ்ப்படங்களில் வரும் அநேக ஹீரோயின்கள் மரை கழண்ட நிலையில்தான் பார்க்க முடிகிறது. நீ போலீஸ்தானே… என்று திருடனை முடிவு பண்ணிக் கொள்ளும் சிருஷ்டி டாங்கேவும் அந்த லிஸ்ட்தான். பட்… கொப்பும் குலையுமாக வருவதால், ரசிகனுக்கு டபுள் ஏசி எபெக்ட்!

படத்தின் இயக்குனர் ராஜபாண்டிதான், சரண்யா பொன்வண்ணனின் திறமையையும் அழகையும் 100 சதவீதம் ரசிப்பவர் போலிருக்கிறது. இவர் இதற்கு முன் இவர் இயக்கிய ‘என்னமோ நடக்குது’ படத்திலும் சரண்யாவுக்கு பிரமாதமான கேரக்டர். இந்தப்படத்தில் சொல்லவே வேண்டாம். அப்படியே மனசை அள்ளிக் கொண்டு போகிறார். இத்தனைக்கும் வில்லி வேறு. என்னடா பண்ணிடுவீங்க? என்கிற தெனாவட்டு சிரிப்புடன், ஒரு வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் வரும் அவரை ரசிக்கலாம்… மேலும் ரசிக்கலாம்… ரசித்துக் கொண்டேயிருக்கலாம். கோர்ட்டில் நீதிபதி முன் நிற்கும் அந்த நேரத்திலும் கூட என்னவொரு கம்பீரம்!

ராதாரவிக்கு கல்வி அமைச்சர் வேஷம். மனுஷன் வாயை திறந்தால் நெருப்பு பறக்கிறது. “நான் இதுக்கு மேலயும் பேசிடுவேன். ஆனால் ரொம்ப பேசுறான். மன்னிப்புக் கேளும்பாங்க. நான் கேட்க மாட்டேன். எதுக்கு? விட்ருங்க” என்று அடக்கமாகவே அலட்டுகிறார். தியேட்டரில் கைதட்டல் பிளக்கிறது.

ட்யூட்டியிலிருக்கும் இன்ஸ்பெக்டர் ஒருவரை நிமிஷத்தில் கைது செய்து சுட்டுவிட முடியுமா? அரைகுறையாக வடிக்கப்பட்ட ஆறிய கஞ்சாகிவிடுகிறது சமுத்திரக்கனியின் பாத்திரப்படைப்பு. ஆனால் அவரது அறிமுகத்தில்தான் எத்தனையெத்தனை பில்டப்? கடைசியில் சொதப்பீட்டீங்களே ராஜபாண்டி?

இப்படத்தின் இசை பிரேம்ஜி. என்னது… பிரேம்ஜியா? நல்லாயிருக்கேய்யா பாட்டெல்லாம் என்று திரும்ப திரும்ப ஆச்சர்யப்பட வைக்கிறார் அவர்.

ஒளிப்பதிவு, எடிட்டிங் பற்றியெல்லாம் தனியாக எழுகிற அளவுக்கு ஒன்றுமில்லை.

அச்சமின்றி பரிட்சை எழுதியிருக்கிறார் ராஜபாண்டி. ஆவரேஜூக்கும் தாண்டி மார்க் கொடுக்கலாம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Simbu’s New Politics In Tamilnadu.
Simbu’s New Politics In Tamilnadu.

https://youtu.be/eO-FB7G6-gQ

Close