துருவங்கள் இரண்டு! துரோகங்கள் நிறைய! போட்டுத்தாக்கும் தயாரிப்பாளர்!

சரின்னா சரி. தப்புன்னா தப்பு. மண்பானையை தரையில் போட்டு டமால் என்று உடைப்பது போல பளிச்சென பேசியே பழக்கப்பட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ரஜினி கமல் விஷால் ஆகிய மூவருக்கும் எதிராக பொங்கி நேற்று வெளியிட்டிருக்கும் பேஸ்புக் பதிவு இது-

இரு துருவங்கள் இந்த சினிமாவில் எப்போதும் உண்டு. இந்த துருவங்களுக்கு அரசியல் ஆசையும் உண்டு. முந்தைய துருவங்கள் அரசியலில் ஈடுபடும் முன் மக்கள் பணியும் செய்தனர். ஆனால் இப்போதைய துருவங்கள் நேரடியாக முதலமைச்சராகிப் பின் மக்கள் பணி செய்ய வருவார்களாம்.

சரி அரசியலுக்கு வர இந்த இருவரும் என்ன நேர்மையை கடைப்பிடித்தார்கள்..? சினிமாவில் கருப்புப் பணம் வாங்காமல் நடித்தார்களா? அல்லது தங்களின் படத்தின் டிக்கெட் விலையை அதிகப்படுத்தி விற்காமல் இருந்தார்களா? அல்லது இருப்பார்களா? தன்னை நேசித்த ரசிகர்களின் காசில் ஊழல் செய்தவர்கள்தான் அரசியல் ஊழலை ஒழிக்கப் போகிறார்களாம். கொடுமையடா சாமி.

சிவாஜி அய்யா சிலை திறப்பு விழாவிற்கு போனீங்களே? அங்கே உங்கள் ரெண்டு பேருக்குமான அரசியல் ஆசையை வெளிப்படுத்தினீர்களே தவிர.. சினிமாவுக்கு பயனுள்ளதாக எதாவது பேசினீர்களா? இல்லையே!

சினிமா தியேட்டருக்கு டிக்கெட் விலையேற்றத்தால் யாரும் வருவதில்லை. ஜி.எஸ்.டி அதன் பின் கேளிக்கை வரி என ஏகப்பட்ட சுமையைத் தூக்கி வைத்திருக்கிற அரசாங்கத்திற்கு அறிவுறுத்தும் விதமாக பேசியிருக்க வேண்டாமா?

சினிமாவை மற்ற மாநிலங்கள் வாழ வைக்கின்றன. இங்கு அதிகபட்ச வரி விதித்து நசுக்குகிறோம். உங்கள் இருவரையும் இன்று அரசியல் நாற்காலி ஆசை வரையிலும் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது இந்த சினிமாதானே? அதற்கு முதலில் நல்லது செய்யுங்க. ஜி எஸ் டி யாலும் கேளிக்கை வரியாலும் சிதைக்கப்படும் சினிமாவிற்காக பேசாத நன்றி காட்டாத நீங்களெல்லாம் சுயநலவாதிகள்தானே?

துணைமுதல்வர், அமைச்சர்கள் , அதிகாரிகள், சினிமா சார்ந்தவர்கள் அடங்கிய அந்த மேடையை சினிமாவிற்கான குரலாகவும் மாற்றியிருக்கலாமே? அப்படி பேசியிருந்தால் அந்த சிம்மக்குரலோனின் ஆத்மாவும் மகிழ்ந்திருக்குமே!

நாற்காலியை நோக்கி ஓடுபவர்களுக்கு எங்கே ஏறிவந்த படிகள் நினைவிருக்கும்? இருக்க வாய்ப்பில்லை. உங்களின் அரசியல் ஆசை தெரிந்துதான் அரசு வரியை ஏற்றிவிட்டு பார்க்கிறது. அரசும் ஒற்றை வரி விதித்த பிறகு இன்னொரு வரியைத் திணிப்பது நியாயமற்றது. இது எல்லாம் மக்கள் தலையில் விழுகிறது.

இதில் வேறு தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகம். எந்த முன்னறிவிப்பும் கலந்து பேசவும் செய்யாமல் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் போது படத்தை நிறுத்தியுள்ளது. இப்படி நிறுத்துவது சர்வாதிகாரத்தனம். இதற்கு முன் நிறுத்தி என்ன பயன் வந்தது? நீங்களாக நிறுத்துவதும் சாயந்திரமானால் இல்லை வாபஸ் என்பதும் வேடிக்கையானது. பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்து முறைப்படுத்தியல்லவா இந்த மூடுதலை அறிவிக்க வேண்டும்?

பப்ளிசிட்டி .. க்யூப் காசுன்னு எவ்வளவு பணத்தை இந்த ஆறாம் தேதி வெளியீட்டிற்காக இறக்கியிருப்பார்கள். அத்தனையும் வீணாப்போகவேண்டுமா? இந்த நட்டத்தை தயாரிப்பாளர் சங்கம் பொறுப்பேற்குமா?

இப்படி படத்தை நிறுத்துகிறேன்னு வட்டிக்கு வாங்கி படமெடுத்தவன் வயிற்றிலடிக்காதீங்க. சாப்பிடுகிற சினிமாவுக்கே நல்லது செய்ய நினைக்காதவர்கள்தான் இந்த மக்களுக்கு கிழிக்கப் போகிறார்களாம். என்னமோ போங்கப்பா. இந்த மண்ணோட துர்பாக்கியம் அதுதானே?

-சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்

No Comments

Leave a Reply

News in Tamilnadu

Facebook

Follow Us on Twitter

Read previous post:
Vishal’s Atrocities On Producers !!
Vishal’s Atrocities On Producers !!

https://youtu.be/2tJ9hrOdz_g

Close